Skip to main content

தேசியகீதத்திற்கு இணையாக ’"நீராரும் கடலுடுத்த'’ கொடுத்த கலைஞர் !

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

கலைஞர், ஒரு மாபெரும் சகாப்தம். பூமிக்கு ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு நிலவு என்பது போல், அவருக்கு நிகர் அவர் மட்டும் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு.

"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்’

-என்ற குறளுக்கு, ’அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்’ என்று கலைஞர் உரை எழுதினார். அவரது உரைப்படி, சான்றாண்மைக்குரியவர் கலைஞர்தான் என்பதை இந்தக் குறள் உணர்த்துகிறது. எத்தனையோ கலை விற்பன்னர்களும் தலைவர்களும் இங்கே இருக்கலாம். என்றாலும், ஒட்டுமொத்த இந்தியாவிற்குமாக இருக்கும் பல்வகைத் திறன்கொண்ட ஒரே தலைவர், ஒரே கலைஞர், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

 

kalaingar with anna



திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக, 1969 ஜூலை 27-ல் பொறுப்பேற்றார் கலைஞர். இந்த கிரீடத்தை அவர் சுமக்க ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. எத்தனையோ சோதனைகள் வந்தபோதும், கட்சியை இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காத்து, தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைமைப் பதவியிலே தொடர்கிறார். இன்று அதற்கான பொன்விழாவைத் தி.மு.க. உணர்வோடு கொண்டாடுகிறது. இப்படியொரு பெருமை கலைஞரைத் தவிர இந்தியாவில் வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்கவில்லை.

 

kalaingar



அவர் மாணவப் பருவத்தில் தொடங்கி, தன் தலையிலே தூக்கிச் சுமந்த முரசொலிலி, 75 -ஆம் ஆண்டு பவள விழாவை அண்மையிலே கண்டது. 13 முறை சட்டமன்றத் தேர்தலிலே நின்று அத்தனை முறையும் வெற்றிபெற்று ஏறத்தாழ 60 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவத்தைக் கொண்ட ஒரே தலைவராகவும் கலைஞரே திகழ்கிறார். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறது. எத்தனையோ முதல்வர்கள் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள். ஆனால், கலைஞரைப்போல், எல்லாத் துறையிலும் சாதித்த ஓர் ஆற்றல் வாய்ந்த முதல்வரை இதுவரை நாடு பார்த்ததில்லை. 1967-ல் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற அறிஞர் அண்ணா 69-ல் மறைந்தார்.

1969 பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட கலைஞர் அவர்கள், 69-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 என 5 முறை முதல்வராகி, தனது திராவிட ஆட்சியால், சமூக நீதிக்காகவும் சமூக நலனுக்காகவும் தன்னால் இயன்றதையெல்லாம் செய்திருக்கிறார். படிக்கவும் படிப்பின்மூலம் உயரவும் வழிதெரியாமல் இருந்த தமிழகத்தை அப்படியே விடியலை நோக்கி நகர்த்தி வந்த தனிப்பெருந்தலைவர் கலைஞராவார். கலைஞர் என்ற பிரம்மாண்டத்தின் ஒளிச்சிதறல், இந்திய வரலாற்றில் பலமாக சுடர்ந்துகொண்டிருக்கிறது.


தமிழ்நாட்டின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் திருக்குவளை என்ற குக்கிராமத்திலே 1924 ஜூன் 3-ல் பிறந்து, இன்று தமிழகத்தின் தலையெழுத்தை, தந்தை பெரியாரோடும் அறிஞர் அண்ணா வோடும் இணைந்து நின்று திருத்திய மாமனிதர்தான் நம் கலைஞர். அவரது பெயர் தமிழக விடியலுக்கான மந்திரச்சொல்லாக மாறியிருக்கிறது என்றால், அதற்காக அவர் நடத்திய பயணமும், சிந்திய வியர்வையும் சந்தித்த போராட்டமும் சொல்லி மாளாதவை.

 

aringar anna

அண்ணாவிற்குப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதன்முதலாக முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் கலைஞர். தமிழ்ச் சமூகமும் தமிழகமும் விறுவிறுவென விடிய ஆரம்பித்தது. சரித்திரச் சாதனைகள் அணிவகுக்க ஆரம்பித்தன. தேசியகீதத்திற்கு இணையாக ’"நீராரும் கடலுடுத்த'’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை, 1972-ல் இருந்து தமிழகம் முழுக்க ஒலிலிக்கச் செய்தார். குடிசைகள் இல்லாத் தமிழகத்தை உருவாக்க, குடிசை மாற்றுவாரியம், மனிதரை மனிதர் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாத் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், தொழுநோய் ஒழிப்புத்திட்டம், இலவசக் கண்ணொளித் திட்டம், விதவைத் திருமண உதவித் திட்டம், கலப்புத் திருமண உதவித் திட்டம், நில உச்சவரம்பு சட்டம், கல்லூரிப் படிப்புவரை இலவசக் கல்வி, ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்று ஏழைகளை நோக்கி அரசுத் திட்டங்கள் பாய்ந்து, மக்கள் மனதில் பசுமையைத் தழைக்கச் செய்தன.