Skip to main content

பெண்கள் மனம் மாறுவது ஏன் தெரியுமா? வழியெல்லாம் வாழ்வோம் #14 

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
vv 14 title



விட்டமின்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பதன் நடுவே பெண்களின் மனோவியல் பற்றிய சில குறிப்புகளையும், ஏன் பெண்களின் மனோவியலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இந்தப் பகுதியில் காண்போம். சத்துக்குறைபாடுகளும் ஹார்மோன் மாற்றங்களும் உடல்நிலையை மட்டுமன்றி உணர்வு நிலையையும் எவ்வெவ்வாறெல்லாம் பாதிக்கின்றன என்பதை அலசலாம். உயிரினங்கள் யாவற்றுக்கும் உடல்நலமும் மனநலமும் நேர்விகித தொடர்புடையது என்கிறது அறிவியல். குறிப்பாக பெண்களிடம் தோன்றும் மனோநிலை மாறுபாடுகள் எளிதாய் உற்றுநோக்கும் வண்ணம் இருப்பதன் காரணம் அவர்கள் உடல் ரீதியில் உள்ளாகும் பாதிப்புகளும், சத்துக் குறைபாடுகளும் தான்.

விட்டமின் D3 போன்றே பெண்களுக்கு அதிகமாய்த் தேவைப்படும் இன்னொரு உயிர்சத்து விட்டமின் B12. மேலும் இந்த இரண்டு உயிர்ச்சத்துக்களும்தான் உடல்நலம் மனநலம் இரண்டையும் வெகுவாய் பாதிக்கின்றன. எனவே விட்டமின் B12 குறைபாடு பற்றி அறிவோம்.

 

 


மிடில் கிளாஸ் குறைபாடு:

சமீபத்தில் மனச் சோர்வு மற்றும் மன அழுத்தத்தில் இருந்தவர்களிடம், இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 இந்தியர்களில் 8 பேர் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் என்று தெரியவந்தது.மேலும் இந்தியாவில் 60 முதல் 70% மக்களுக்கு வைட்டமின் பி12 குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிலும் இக்குறைபாடு உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களே என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால்தான் B12 குறைவை மிடில் கிளாஸ் குறைபாடு என்று கூறுகின்றனர்.

ஏன் வேண்டும் B12?

விட்டமின் B12 நரம்பு மண்டலத்தின் திசுக்கள் சரியாய் செயல்பட அத்தியாவசியத்தேவையாய் உள்ளது. மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாய் செயல்படவும் விட்டமின் B12 தேவை. ஆரோக்கியமான மனநிலைக்கு போதிய அளவு விட்டமின் B12 அவசியம். ஏனென்றால், மனநிலையை சீராக வைத்துக்கொள்ள உதவும் Monoamine எனப்படும் "ஒற்றை அமீன்கள்" எனப்படும் நரம்பியல் கடத்திகளை உருவாக்க விட்டமின் B12 கட்டாயம் தேவை. மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் விட்டமின் B12 தேவை. பொதுவாக அனைவருக்கும் விட்டமின் B12 அவசியமென்றாலும், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் பெண்களுக்கு மற்றவர்களுக்குத் தேவைப்படும் அளவான 2.4 mcg ஐ விட அதிக அளவில் (முறையே 2.6 mcg, 2.8 mcg) தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலான நம்மூர் பெண்கள் கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் முறையான சரிவிகித மற்றும் கலப்பு உணவை உட்கொள்வதில்லை. அதனால் அப்போது ஏற்படும் குறைபாடு அதன் பிறகும் நீடிக்கிறது.
  pregnant lady



விட்டமின்  B12ம் மரபியலும்:

விட்டமின் B12 செல்களுக்குள் ஊடுருவ FUT2 போன்ற சில மரபணுக்கள் அவசியமாகின்றன. அத்தகைய மரபணுக்களின் மாற்றம் ஆற்றும் மரபணுக்கூட்டமைப்பின் மாறுதல்களாலும் [Gene and Genome Wide Assosiation (GWA)] விட்டமின் B12 சரியாகச் செல்களை சென்று சேர இயலாத நிலை உருவாகிறது. எனவே தொடர்ந்து மனஅழுத்தம் நினைவாற்றல் குறைவு உள்ளவர்கள் FUT2- என்கிற ஒரு வகையான மரபணு சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீரிழிவு நோய் கொண்ட பெண்களின் விட்டமின் B12 குறைபாடு:

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகளுக்கு உயிர்சத்துக்கள் ரத்தத்தில், செல்களுக்குள் சேரும் அளவு மிகக்குறைவாகவே இருக்கும். எனவே அவர்களுக்குத் தேவையான B12 விட்டமின் குறைபாடு அடைவதும் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. ஓர் ஆய்வு முடிவில், Metformin எனப்படும் நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்படும் மருந்து, B12 ன் செரிமாணத்தைக் குறைப்பதால், அது உடலுக்குத் தேவையான அளவு கிடைப்பதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் மெட்பார்மின் போன்ற மருந்துகளை பெருமளவில் உபயோகிப்பதை நாம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். எனவே விட்டமின் செரிமானத்தை சரியாக்கி, குறைபாடுகளைத் தவிர்க்க உடற்பயிற்சி சிறப்பான முறையாகும். உடற்பயிற்சி மூலமாக இன்சுலின் சுரப்பை சரியாகவும், கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இயலும்.

விட்டமின் D3யும் மனநலமும்:

சென்ற பாகத்தில் விட்டமின் D3 பற்றி பார்த்தோம். விட்டமின் D3 மறைமுகமாக மனநலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. வைட்டமின் D3 குறைபாடு கால்சியம் உறிஞ்சுவதை (Calcium absorption) தடுக்கிறது. வைட்டமின் B12 வயிற்றுக்குள் செல்வதற்கு கால்சியம் அவசியம். நம்  உணவில் வைட்டமின் B12 போதுமான அளவு இருந்தாலும், வைட்டமின் D3 குறைபாடு இருப்பின், நாம் வைட்டமின் B12 குறைபாட்டையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்த B12 குறைபாடு ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சனைகளோடு, மன நலத்தையும் பாதிக்கும் வேலையையும் செய்கிறது.

 

 


பெண்களுக்கு அதிகமாய் அவசியமாகும் உயிர்ச்சத்துக்கள் பற்றி பார்த்தோம். இந்த சத்துக்கள் குறைந்தால், உடற்பயிற்சி சார்ந்து மருந்தில்லா முறையில் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை வரும் வாரங்களில் காண்போம். அதே போல் இயற்கை வழி உணவியல் முறைகள் மூலமாகவும் தேவையான உயிர்சத்துகளைப் பெரும் முறைகள் பற்றியும் வரும் வாரங்களில் பேசலாம்.


முந்தைய பகுதி:

இளம் பெண்களுக்கு முகப்பரு வரவைக்கும்... மாதவிடாய் காலத்தில் உடல்வலி உண்டாக்கும்... எது அது? வழியெல்லாம் வாழ்வோம் #13