Skip to main content

சோதனை எலிகளாய் இந்தியர்கள்... மருத்துவம் மட்டும் ஃபாரீனுக்கு... உயிரின் விலை #2

Published on 18/07/2018 | Edited on 06/08/2018

முந்தைய பகுதி:

உங்கள் மருத்துவர் எழுதித் தரும் மாத்திரைகளை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்... - உயிரின் விலை #1 


ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர் சமித் ஷர்மா (Dr.Samit Sharma, IAS, Rajasthan Medical Services Corporation, Jaipur) என்பவரின் முயற்சியால் 2012 முதல் ‘ஜெனரிக் மருந்தகங்கள்‘ இயங்கி வருகின்றன. மேலும் 45000 கோடி காப்புரிமை முடிந்த மலிவு விலை ஜெனரிக் மருந்துகளை அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா உட்பட பல நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏழை மற்றும் வளர் பொருளாதார நாடுகள் எச்.ஐ.வி. எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கடும் நோய்களை எதிர்கொள்ள இந்தியாவைத்தான் நம்பி உள்ளன. இந்தியாவில்தான் இதற்கான மருந்துகள் தயாரிக்கப்படுவது எத்தனை பேருக்கு தெரியும்? வெளிநாடுகள் இறக்குமதி செய்து பயனடையும் போது நாம் பயன்பெற முடியாமல் இருப்பது என்ன நியாயம்?

 

samit sharma



பலரின் வாழ்க்கையை பாழாக்கும் டாஸ்மாக்குகளை நடத்தும் தமிழக அரசு, பலரின் உயிரைக் காப்பாற்றக்  கூடிய ஜெனரிக் மருந்தகங்களை நடத்துவதில்லை. மக்களுக்கு சேவை செய்கிறேன் என்ற பெயரில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் என்று விளம்பரம் தேடிக் கொள்வதை விட்டு விட்டு உண்மையாகவே மக்களுக்குத் தேவையான ‘ஜெனரிக் மருந்தகங்களை' அரசாங்க மருந்தகம் என்ற பெயரில் திறந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அம்மா மருந்தகத்தில் கூட ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்வதில்லை, மேலும் பிராண்டட் மருந்துகளின் எம்.ஆர்.பி. விலையில் 10% மட்டுமே சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை ஏற்கனவே பல தனியார் மருந்தகங்களே செய்கின்றன. இதையே அரசாங்கமும் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. உண்மையில் மக்கள் நலனில் அக்கறை இருந்தால் அனைத்து திட்டங்களுக்கும் ‘அம்மா' என்ற பெயரில் விளம்பரம் தேடிக் கொள்ளாமல் ‘ஜெனரிக் மருந்தகங்களை' ‘அரசாங்க மருந்தகம்' என்ற பெயரில் திறந்தால் அதுதான் உண்மையில் மக்களுக்கு பயன் அளிக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் ‘ஜெனரிக் மருந்தகங்களை' திறப்பது சாத்தியம் என்றால், ஏன் தமிழகத்தில் முடியாது? சிந்திக்குமா தமிழக அரசு?

ஒரே மருந்து குறைந்த விலைக்கும் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது அவற்றில் சில

மாத்திரையின் பெயர் - பிராண்டட் மருந்தின் விலை - ஜெனரிக் மருந்தின் விலை
பாராசிட்டமால் (10 மாத்திரை) ரூ.18 ரூ.3
அமாக்சிலின் (10 மாத்திரை) ரூ.100 ரூ.24
அலித்ரோமைசின் (10 மாத்திரை) ரூ.310 ரூ.85
ஆண்டிபயாடிக் (10 மாத்திரை) ரூ.500 ரூ.30
மெஃப்பிரிஸ் டோன் (10 மாத்திரை) ரூ.4350 ரூ.500
(கர்ப்பத்தடை மாத்திரை)



இது பற்றி அடையாறு கேன்ஸர் இன்ஸ்டியூட்டின் சேர்மன் டாக்டர். வி. சாந்தா அவர்களிடம் கேட்டோம்.

 

dr.shantha



அவர் கூறியது,

"அடிப்படையில் ஜெனரிக் மருந்துகளுக்கும் பிராண்டட் மருந்துகளுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பொதுவாக இந்தியாவில் உள்ள மக்களுக்கும், ஏன் மருத்துவர்களுக்கே கூட வெளிநாட்டு நிறுவனங்களின் பிராண்டட் மருந்துகள்தான் சிறந்தது என்ற மனநிலை இருக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள் பிராண்டட் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். எப்படி பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்களுடைய மருந்துகளின் செயல்திறன் குறித்து அவர்கள் நாட்டு தர கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழ்  உள்ளதோ அதே போல் நம் நாட்டில் தயாரிக்கும் ஜெனரிக் மருந்துகளுக்கும் தரச் சான்றிதழ் உள்ளது.

 

 


எங்கள் அடையாறு கேன்ஸர் இன்ஸ்டியூட்டில் பெரும்பாலும் ‘ஜெனரிக்' மருந்துகளையே உபயோகிக்கின்றோம். ‘ஜெனரிக்' மருந்தாகக் கிடைக்காத மருந்துகள் மட்டும்தான் பிராண்டட் வடிவில் உபயோகிக்கிறோம். கிட்டத்தட்ட 80% ‘ஜெனரிக்‘ மருந்துகள்தான் இங்கு பயன்படுத்துகின்றோம். ‘ஜெனரிக்' மருந்துகளை பிராண்டட் மருந்துகளுடன் ஒப்பிடும்போது அதன் செயல் திறனில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை".

 



சென்னை வடபழனியில் உள்ள சிறுநீரக சிறப்பியல் நிபுணர் டாக்டர் ராம் பிரபாகர் ஜெனரிக் மருந்துகள் குறித்து கூறியது...

 

dr.ram prabakar



"இந்தியாவில் 80% மருத்துவ செலவுகளை மக்களே செய்து கொள்கின்றனர். உலக நாடுகளில் ஜெனரிக் மருந்துகளின் உபயோகம் அதிகரித்துள்ளதால் இந்தியாவிலும் அதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஜெனரிக் மருந்துகளின் உபயோகத்தால் பெருமளவு மருத்துவ செலவு குறையும்.

பெரும்பான்மையான மருத்துவர்கள் பிராண்டட் மருந்துகளையே பரிந்துரைப்பார்கள். அதற்கு காரணம் ஜெனரிக் மருந்துகளின் தரம் குறைவு என்று நினைப்பதுதான். உண்மையில் இங்கு போலி மருந்துகளும், முறைகேடாக தர சான்றிதழ் பெறப்படுவதாலும்தான் இந்த நிலை உள்ளது. உண்மையில் பிராண்டட் மருந்துகளுக்கு சமமாக தரமான ஜெனரிக் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன.

 

 


நான் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்கிறேன். ஆனால் தரமான உற்பத்தியாளர்களால் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு மருத்துவ சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட மருந்தையே பரிந்துரைப்பேன். FDA-Food and Drug Administrationனின் தர சான்றிதழ் பெற்ற மருந்துகளை பரிந்துரைப்பதே நல்லது.

சிறுநீரகம் செயல் இழந்தவர்களும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களும் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. சராசரியாக ஒரு மாதத்திற்கு 15000-18000 வரை செலவாகும். அதே ஜெனரிக் மருந்தாக எடுத்துக்கொண்டால் 10000-12000 வரைதான் ஆகும். மேலும் நேரடியாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து வாங்கினால் M.R.P. விலையில் 20-30% குறைந்த விலையில் கிடைக்கும். இதனால் வசதி குறைந்த நோயாளிகள் பெருமளவில் பயனடைகின்றனர்" என்று கூறினார்.

 

 

human lab rats



ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க, முதலில் விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்து விட்டு பிறகு மனிதர்கள் மீது பரிசோதிக்கின்றனர். குறிப்பிட்ட நோய்க்கான மருந்தை, அந்த நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு பல மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பரிசோதிப்பார்கள். அவர்களுக்குப் பணம், அல்லது இலவச மருத்துவ சிகிச்சை அல்லது இலவச மருந்துகள் வடிவத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய, படிக்காத மக்களை தங்களுடைய ஆய்வுக்கு சுலபமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பக்கவிளைவுகளைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிவிக்காமலே ஆராய்ச்சிகளில் சேர்ந்துக் கொள்ள தூண்டுவதும் பரவலாக நடக்கிறது.

 

 


இப்படி பல பன்னாட்டு மருந்து கம்பெனிகள் நம் இந்திய மக்களை சோதனை கூட எலிகளை போல் பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் தங்கள் மருந்துகளை விற்று, கொள்ளை லாபமும் ஈட்டுகின்றது. இதற்கு இந்திய அரசாங்கமும் துணை போகிறது. இந்தியாவின் புதிய மருந்துகளுக்கான சட்டம் 2005ம் ஆண்டு திருத்தப்பட்டது. மருந்தக ஆராய்ச்சி சோதனைகளை மற்ற நாடுகளில் நடக்கும் போதே இந்தியாவிலும் இணையாக நடத்துவதற்கு அந்த சட்ட திருத்தம் வழி செய்தது. அதற்கு முன்பு மற்ற நாடுகளின் பரிசோதனைகள் முடிக்கப்பட்ட பிறகுதான் இந்தியாவில் ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த சட்ட திருத்தம் மூலம் வளர்ந்த நாடுகளில் மருந்தக ஆராய்ச்சி நடத்துவதற்கு ஒப்புதல் கிடைக்காத மருந்துகளை, இந்திய மக்களை பயன்படுத்தி ஆய்வு நடத்துவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி செய்துள்ளது. மக்களின் உடல்நலத்தை விட கார்ப்ரேட் நிறுவனங்களின் வளத்தை முக்கியமாகக் கருதும் அரசுகளின் நடவடிக்கை இப்படித்தான் இருக்கும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.