Skip to main content

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.