Skip to main content

குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? மனதின் நூலகம்!!!

Published on 28/06/2018 | Edited on 08/07/2018

நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?

நிமோனிக்ஸ் (Mnemonics):

நிமோனிக்ஸ் என்பது நினைவாற்றல் பயிற்சிக்கு உதவும் வழி. கிரேக்க பெண் கடவுள் நிமோசின் என்ற பெயரில் இருந்து நிமோனிக்ஸ் என்ற சொல் வந்தது. நிமோனிக்ஸ்சை நினைவுபடுத்திக் கொள்ள உதவும் வழி அல்லது நினைவாற்றலை அதிகரிப்பதற்கான விதி என்று கூறலாம்.

 

brain


 

சுருக்கமாக விளக்க வேண்டும் என்றால், நாம் ஆங்கில மாதங்களுக்கு எத்தனை நாட்கள் என்பதை எளிதில் அறிவதற்கு, கை விரல்களை மடக்கி, மேட்டுப் பகுதியில் வரும் மாதத்திற்கு 31 நாட்கள் என்றும், பள்ளப் பகுதியில் வரும் மாதத்திற்கு 30 நாட்கள் என்றும் நினைவு படுத்துவோம் அல்லவா, அதுபோன்ற எளிதான வழிகளைத்தான் நிமோனிக்ஸ் என்கிறார்கள்.

 

உங்களது மனத்தில் அழுத்தமாகப் பதியாத எந்த விஷயத்தையும் மீண்டும் நினைவு படுத்துவது சிரமம். ஞாபக சக்தி இல்லாத மனிதன் தன்னை வெளிப் படுத்தும் திறனையும் பெருமளவில் இழந்து விடுகிறான். அதே சமயத்தில் துல்லியமான ஞாபக சக்தி இருந்தால், அது, ஒரு மனிதனுக்கு வெற்றிக்கான அனைத்துக் கதவுகளையும் மிக எளிதாகத் திறந்து விடும்.

 

 

 

நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களுக்குத் தன்னம் பிக்கையும் அதிகம் இருக்கும். ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருப்பதற்கு அந்த விஷயத்தின் மீது ஆர்வம் இருப்பது அவசியம். அதேபோல, குறிப்பிட்ட விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பமும் அவசியம்.

 

லுசியஸ் சிபியோ என்பவர் ரோம் நகரத்தில் இருந்த அத்தனை பேரின் பெயர்களையும் நினைவில் வைத்திருந் தாராம். ஒரு நிறுவனத்தின் மேலாளர், தனக்குக் கீழே பணியாற்றும் அனைவரையும் பெயர் சொல்லியே அழைப்பார். அவருக்குக் கீழே 500 பேர் பணியாற்றினார்கள். அத்தனை பேரின் பெயரையும் அவர் நினைவில் வைத்திருந்தார். நிறைய விஷயங்களை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர கொண்டுவர உங்களது நினைவாற்றல் அதிகரித்துக் கொண்டே போகும்.

 

நினைவாற்றலுக்கு ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் இருக்க வேண்டும் என்பதைப் போலவே, நாம் பார்க்கும் அல்லது படிக்கும் அல்லது கேட்கும் விஷயங்களுடன் மனம் ஒன்ற வேண்டும். ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனிக்கும்  போது அந்த விஷயம் நன்கு மனத்தில் பதியும். பிறகு அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது சுலபம்.

 

 

 

ஊன்றிக் கவனிக்காத, மனம் ஒன்றிக் கவனிக்காத எதுவும் நினைவில் தங்காது. நீங்கள் ஆர்வத்தோடு ஒரு கதைப்புத்தகத்தை வாசிக்கிறீர்கள். அப்போது அந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தையுமே ஊன்றிக் கவனிக்கிறீர்கள். அது உங்களது மனத்தில் நன்கு பதிந்து விடும்.

 

brain


 

ஆர்வம் இல்லாமல், ஊன்றிப் படிக்காத விஷயங்கள் நினைவில் தங்குவதில்லை. அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதும் கடினம். ஒரு பாடகர் மிக எளிதாகப் பாடுவதற்குக் காரணம், அவர் இசையின் மீது ஆர்வமிக்கவராக இருப்பதுதான். அதேபோல ஒரு நல்ல மருத்துவருக்கு நோயாளி நோயைக் கூறியதுமே மருந்து நினைவுக்கு வருகிறது. அதற்குக் காரணம் அவர் தனது மருத்துவப் பணியை நேசிக்கிறார். அதில் ஆர்வத்துடன் இருக்கிறார் என்பதுதான்.

 

மற்றொரு விஷயம் நம்பிக்கை. நாம் நினைவாற்றல் உள்ளவர்கள். நம்மால் எதையும் மறக்க முடியாது. எல்லாவற்றையும் நம்மால் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். 


‘எனக்கு இது நினைவிருக்கும்’.


‘எனக்கு அபாரமான நினைவாற்றல் உள்ளது.’


‘இதை எளிதாக நான் நினைவில் வைத்திருக்க முடியும்’


என்று நமக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ள வேண்டும். இந்த நேர்மறை எண்ணம் நமக்குள் நம்பிக்கையை வளர்க்கும்.


மாறாக ‘நான் மறந்து விடுவேன்’ என்றோ,


‘இதை என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது’ என்றோ எதிர்மறையாக நினைக்கக்கூடாது. அது நமது நினைவாற்றலை தேய்த்துவிடும்.

 

 


ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எழுதி வைப்பது பலனளிக்காது. நீங்கள் எழுதி வைப்பது உங்களது கையெழுத்தை மேம்படுத்தலாம் அல்லது எழுதும் வேகத்தை அதிகரிக்கலாம். மற்றபடி நினைவாற்றலை அது அதிகரிக்காது.


எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க பேப்பரில் எழுதி வைப்பது, ஒரு வலிமையான நல்ல நினைவாற்றலை வளர்ப்பதற்கான அடிப்படை விஷயங்களுக்கு எதிரானது என்று ஹாரி லோரய்ன் கூறுகிறார்.

 

brain




சில விஷயங்களை நினைவில் வைத்திருக்க சில எளிதான வழிமுறைகளைக் கையாள வேண்டும்...


உதராணமாக நாம் பள்ளியில் படிக்கும் போது வானவில்லில் உள்ள ஏழு நிறங்களை எளிதாக நினைவில் வைத்திருக்க vibgyor என்ற வார்த்தையை ஆசிரியர் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
 


இந்த வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் வானவில்லில் உள்ள ஒவ்வொரு நிறத்தைக் குறிக்கும். நாம் இந்த வார்த்தையை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும். அதன்மூலம் வானவில்லில் உள்ள ஏழு நிறங்களையும் சொல்லி விடலாம்.

 

அடுத்த பகுதி:


நினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி! -மனதின் நூலகம் #2