Skip to main content

ஃபேஸ்புக் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா?

Published on 23/03/2018 | Edited on 23/03/2018

இதுநாள் வரை போற்றிப் புகழப்பட்டு வந்த ஃபேஸ்புக் இப்படி செய்துவிட்டதே என்ற ஆத்திரமும் புலம்பலும் இப்போது மீடியாக்களில் எதிரொலிக்கிறது. அப்படி என்ன செய்துவிட்டது ஃபேஸ்புக்? தனது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட தகவல்களை இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதியளித்துள்ளது. இங்கிலாந்து  நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் வெற்றி தோல்விகளை முடிவு செய்ய உதவும் பணியைச் செய்து வருகிறது. ஃபேஸ்புக் தரவுகளின் அடிப்படையில் அரசியல் ஆய்வு செய்து தேர்தல் வியூகங்களை வகுத்து தருகிறது. இந்த ஆய்வு முக்கிய நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், வெறுப்புகள் போன்ற மனநிலையை ஃபேஸ்புக் தரவுகளை வைத்து ஆய்வு செய்து பொய்பிரச்சாரங்களை பரப்பியிருக்கிறது. இதோடு பல மோசடிகளையும் அரங்கேற்றியுள்ளது. இந்த மோசடியை சண்டே அப்சர்வர் இதழும் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தின. வசமாக சிக்கிக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 
 

Mark zucker



சரி, உலகிலேயே தமது பயனாளர்கள் தகவல்களை திருடுவது ஃபேஸ்புக் மட்டும்தானா? அனைத்து தளங்களிலும் பயனாளர்களின் தகவல்கள் திரட்டி விற்கப்படுகிறது. தேடுபொறிகள், மின்னஞ்சல் சேவைகள், அனைத்து இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனங்கள் என பட்டியல் மிக நீளமானது. இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் தகவல்களை தானே இப்படி திரட்டி விற்கப்படுகிறது என நினைத்தால், வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் 500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்கப்பட்டதில்  பிரச்சனை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆதார் தகவல்களை பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று உச்சநீதி மன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியது. ஏன் சமீபத்தில் மூடப்பட்ட ஏர்செல் நிறுவனம் கூட அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களின் ஆதார் இணைப்புகள் மற்றும் தகவல்களை வைத்திருக்கிறது. யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை.

 

FB theft



ஏர்டெல் நிறுவனம் செல்போன் வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஆதார் எண்ணை பயன்படுத்தி, அவர்கள் அனுமதி இல்லாமலேயே ஏர்டெல் பேமண்ட் வங்கியில் கணக்கைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் எரிவாயு மானியம் பெறும் 31 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே இப்படி கணக்கை தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கேஸ் மானியத் தொகைக்காக இவர்கள் அளித்திருக்கும் வழக்கமான வங்கிக் கணக்கிற்கு பதிலாக பேமண்ட் பேங்க் கணக்கை இணைத்துள்ளது. மத்திய எண்ணெய் அமைச்சகமும் புதிய வங்கிக் கணக்கிற்கு, தேசிய பண பரிவர்த்தனை கழகம் (National Payments Corporation of India) மூலம் மானியத் தொகையை பரிமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.190 கோடி வரை முறைகேடாக ஏர்டெல் பேமென்ட் வங்கிக்குச் சென்றுள்ளது. இது வேறு ஃபேஸ்புக் விஷயம் வேறு என்று நினைக்கலாம். ஆனால் ஒரே பதில் தான் அனைத்தும் தகவல்கள் மோசடிதான். ஆக அரசியல் ஆதாயத்திற்காகவும், கொள்ளை இலாபத்திற்காகவும், தவறான வணிக விளம்பரத்திற்காகவும் மக்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்துவது தொடர்கதையாகிவிட்டது.

மாட்டிக்கொண்ட கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போல் தரவுகளை ஆய்வு செய்யும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இன்றைய  நவீன மார்க்கெட்டிங் இரகசியமே இதுதான். தகவல்களைத் திரட்டி அலசி, ஆராய்ந்து அதன் அடிப்படையில்  மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது என கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட், அரசியல் தலைவர், சினிமா பற்றி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தக்கவாறு தங்களை முன்னிலை படுத்தப்படுகின்றன. ஒன்று மக்களின் மனநிலை என்னவோ அதற்குதக்கவாறு தனது சேவை, விளம்பரம், விற்பனை, தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றை வகுத்துக் கொள்வது. இரண்டு மக்களின் மனநிலையை தனக்கு சாதகமாக மாற்ற பொய்யான பிரச்சாரத்தை பரப்புவது. இதற்காகத் தான் இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகிறது. 
 

social media theft



உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான குணம் ஒன்று உண்டு. இது எந்த ஒரு நிகழ்விலும் புரிதல் இல்லாமை, பொய்யான தகவல்களை முழுமையாக நம்புவது, உணர்ச்சிவசப்பட்டு புரிந்துகொள்ளுதல், மிக நேர்த்தியாக செய்யப்படும் பொய் பிரச்சாரங்களை முழுமையாக நம்பிவிடுவது ஆகிய பொதுவான மக்களின் இந்த மனநிலைதான் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற நிறுவனங்களின் மூலதனம். மக்களின் பொதுவான குணங்களை கொண்டுதான் தகவல்களை ஆய்வு செய்து வரும் நிறுவனங்கள் தகவல்களை திரட்டி தமக்கு சாதகமான முடிவுகளை மக்களின் மூளையை சலவை செய்வதன் மூலம் மிக துல்லியமாக சாதித்து விடுகின்றன. அந்த வகையில் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதியளித்தது பெரும் மோசடி. இருந்தும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்களை நிச்சயம் முழுமையாக புறக்கணிக்க முடியாது. அதேபோல இந்த தகவல் திருட்டை நிச்சயம் எக்காலத்திலும் ஒழிக்கவும் முடியாது. ஆனால் சமூக வளைதங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை வழியே அவசியமே இல்லாத வேண்டாத தகவல்கள் நமது மூளையை ஆக்கிரமித்துக்கொள்ளுமே தவிர நல்ல சிந்தனையை வளர்க்க உதவாது. புத்தகங்கள்தான் சிந்தனையை மேம்படுத்தும்.