Skip to main content

முதல்வரின் ’உங்களில் ஒருவன்’ நூலை வரவேற்கிறோம்! - திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை தீர்மானம்

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

Chief Minister MK Stalin's 'ungalil oruvan' book Resolution of the Dravida Progressive Creative Council

 

திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவையின் நிர்வாகக் குழு கூட்டம் 1ஆம் தேதி இரவு, இணையம் வழியாக நடந்தது. பேரவையின் தலைவர் முனைவர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்தது. இதில் பேரவையின் நெறியாளர் கவிக்கோ துரை வசந்தராசன், துணைத் தலைவர் கவிமாமணி வெற்றிப்பேரொளி, எழுத்தாளரும் வழக்கறிஞருமான பேரவையின் செயலாளர் எம்.எம்.தீன், அரசு வழக்கறிஞரும் எழுத்தாளருமான இணைச்செயலாளர் அன்னக்கொடி, பொருளாளர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், கவிஞர் முல்லை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

1, தமிழகத்தின் இடர் நிலையைக் களைந்து, அனைத்து வகையிலும் நல்லாட்சியைத் தந்துகொண்டிருக்கும் மாண்பரை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை, தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறது.

 

2.தனது வாழ்க்கைப் பயணத்தில் 69-ஆம் வயதில் அடிவைத்திருக்கும் தமிழக முதல்வருக்கு, இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

3. முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதி வெளியிட்டிருக்கும் ‘உங்களில் ஒருவன்’ நூல், 60 ஆண்டுக்கால தமிழக அரசியல் நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த வரலாற்று ஆவண நூல் என்பதால், இதை வாழ்த்தி வரவேற்பதோடு, நூல் குறித்த ஆய்வரங்குகளை நடத்திப் பரப்புரை செய்வது என்றும் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

 

4. திராவிட வரலாற்றின்  முதன்மைக் கவிஞரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு, தமிழகத்தின் தலை நகரான சென்னையில் ஒரு மணி மண்டபம் அமைக்குமாறு, தமிழர்களுக்கான ஆட்சி அமைந்திருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசை, வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கை அண்மையில் முதல்வரிடம் நேரில் வைக்கப்பட்டிருக்கிறது.  

 

5. திராவிட இயக்கக் கவிஞர்களான சுரதா, பொன்னிவளவன், முடியரசன், கவிக்கோ அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களுக்கு, சென்னையில் ஒரே இடத்தில் நினைவரங்கம் அமைக்க வேண்டும் என்றும், இத்தகைய திராவிட இயக்கக் கவிஞர்களின் பெயரிலும் விருதுகளை அறிவிக்க வேண்டும் என்றும், தமிழக அரசை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கையும் அண்மையில்  முதல்வரிடம் நேரில் வைக்கப்பட்டிருக்கிறது.

 

6. தமிழக பண்பாட்டின் மாண்புகளும், நம் இன மொழி உணர்வுகளும், வருங்காலத் தலைமுறையினரின் இதயங்களில் விதைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசரத் தேவையாகும். எனவே, அதற்கு இசைவாக தமிழகத்தின் பாடத் திட்டத்தில், திராவிட இயக்கப் படைப்பாளர்களின் படைப்புகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசை, இந்த பேரவை  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

 

மேற்கண்ட தீர்மானங்களோடு, இனமொழி உணர்வுடன் திராவிடச் சிந்தனை கொண்ட படைப்பாளிகள் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்