Skip to main content

சகலமும் வழங்கும் திங்களூர் சந்திரன்! 

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

 Tingaluru Chandran provides everything!

 

சந்திரன் மகா விஷ்ணுவின் இதயத்திலிருந்து பிறந்தவர் என்றும், அமுதம் பெறுவதற்கு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது, கடலிலிருந்து லட்சுமிக்கு முன்பே தோன்றியவர் என்றும், அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் என்றும் புராணங்களில் உள்ளன.

 

தட்சன் தனது 27 மகள்களை (அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களாக உள்ளவர்கள்) சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அவர்களுள் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் அதிக காதல் வயப்பட்டிருந்தான். இதனால் வருத்தமுற்ற மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். கோபமுற்ற தட்சன் சந்திரனை ‘சயரோக நோய் உண்டாகி தேய்பிறையாகக் கடவது' என சாபமிட்டான். இதனால் சந்திரனது உடல் தேய்ந்துகொண்டே போனது. சாபவிமோசனம் பெற சிவபெருமானை வேண்டித் தவமிருக்குமாறு தேவர்கள் ஆலோசனை சொல்ல, சந்திரன் சிவனை வேண்டிக் கடுந்தவமிருந்தான். சிவபெருமான், ‘மாதத்தில் பாதி நாள் தேய்ந்தும், அடுத்த பாதி நாள் வளர்ந்தும் வருவாய்' என்று வரமளித்தார். அதனால்தான் வளர்பிறை, தேய்பிறை உண்டாகின்றன என்று புராணம் கூறுகிறது.

 

சந்திரன் சிவபெருமானது இடது கண்ணாகக் கருதப்படுகிறார். சிவனின் தலையிலும் அலங்கரிக்கிறார். இப்படிப்பட்ட சந்திரனுக்கு பல பெயர்கள் உள்ளன. அமுதத்தை உண்டதால் சுதாகரன், குமுத மலரை விரும்பியதால் குமுதப் பிரியன், வெண்மேனியன் என்பதால் சசி, சசாங்கன், சசிதரன், ரோகிணியின் நாயகன் என்பதால் ரோகிணிபதி, பனியை உண்டாக்குவதால் ஷிமகரன், அந்தணர்களுக்கு தலைமை ஏற்றதால் விதராஜன், அத்திரி முனிவரின் மகன் என்பதால் ஆத்திரேயன், திருமகளோடு பாற்கடலில் தோன்றியதால் ரமாப்ரதா, 27 நட்சத்திரங்களை மனைவியாகக் கொண்டதால் கலாநிதி, நட்சத்திர நாயகன், உடுபதி, நிலா, அம்புலி, இந்து, மதி எனப் பல பெயர்களைப் பெற்றுள்ளார் சந்திரன்.

 

மேலும் சந்திரன் வளர்பிறையில் சௌமியன்; தேய்பிறையில் குரூரன். அன்பு, பாசம், தாய்மை, கவிதை, கற்பனை, ஆன்மிகம், காவியம், கலைகள், நீச்சல், விவசாயம், நீதி, நேர்மை, சுகபோகம், புகழ் போன்ற அனைத்தும் சந்திரனால் கிடைப்பவையே. இவரின் ஆதிக்கத்தினால் மனித உடலில் மூளை, வயிறு, மார்பு, நீர் தொடர்பான நோய்களும் ஏற்படும். மேலும் உணவுகள், தேன், மது, உறக்கம், குதிரை, மாறுகண், காசநோய், பெண்களின் ஆடைகள், நறுமலர்கள் ஆகியவற்றுக்கும் இவரே காரகன். ‘சந்திரன் நிலை காரணமாக மேற்சொன்னவற்றில் இடையூறுகள், தடைகள் காணப்பட்டால் அவற்றிலிருந்து நிவர்த்தி பெற பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சந்திரனை வழிபடலாம். வெண்ணிற ஆடைகள் அணிவித்து அலரி, அல்லி மலர்களால் அர்ச்சித்து தயிர் சாதம், நெய் பாயசம், சுவையான இனிப்புகள் படைத்து சந்திரனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமைகளில் படையலிட்டு அபிஷேக ஆராதனை செய்தால் சந்திர தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். உடல் சம்பந்தப்பட்ட பல தொந்தரவுகளுக்கு இவரை வணங்கினால் நிவர்த்தி பெறலாம்'' என்கிறார்கள். 

 

 Tingaluru Chandran provides everything!

 

நவகிரக கோவில்களில் இரண்டாவதாக அமையப்பெற்றுள்ளது திங்களூர் சந்திரபகவான் கோவில். இவ்வூரில்தான் திருநாவுக்கரசர் மீது பெரும் பக்திகொண்ட அப்பூதியடிகள் வாழ்ந்தார். அவர் நடத்திய தர்மசத்திரம், கல்விச் சாலைகள் பற்றிக் கேள்வியுற்ற நாவுக்கரசர் இவ்வூருக்கு வந்து அப்பூதியடிகளை சந்தித்து பெருமிதம் கொண்டார். அப்போது நாவுக்கரசருக்கு விருந்து படைக்க தனது மகனை தோட்டத்திற்கு வாழையிலை பறிக்க அப்பூதியடிகள் அனுப்ப, அவன் பாம்பு கடித்து இறந்து போனான். அதைச் சொன்னால் நாவுக்கரசர் விருந்துண்ணாமல் போய்விடுவாரோ என்று, மகனின் இறந்த உடலை மறைத்துவிட்டு நாவுக்கரசருக்கு விருந்து படைத்தனர். ஆனால் அவரோ, ‘உங்கள் மகனும் என்னோடு அமர்ந்து சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடுவேன்' என வலியுறுத்தியதும், தங்கள் மகன் பாம்பு தீண்டி இறந்துபோன உண்மையைக் கூறினர்.

 

அதைக் கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் வேதனையுற்றதோடு, அவனது உடலை எடுத்துச்சென்று சிவாலயத்தில் கிடத்தி இறைவனை வேண்டிப் பாடினார். சிறுவனைக் கடித்த அந்த பாம்பே அங்கு வந்து சிறுவனின் உடல் ஏறிய விஷத்தை உறிஞ்ச, சிறுவன் உயிர்பிழைத்தெழுந்தான். இவ்வாலயத்தில் நாவுக்கரசர், அப்பூதியடிகள், அவர் மனைவி, மகன் ஆகிய நால்வருக்கும் சிலைகள் உள்ளன சாட்சியாக. இப்படி நாவுக்கரசரால் பாடல் பெற்ற திங்களூரில் இறைவன் கைலாசநாதராகவும், உமையவள் பெரியநாயகியாகவும் காட்சி தருகிறார்கள். இங்கு சந்திர பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. பௌர்ணமி, அமாவாசையன்று வரும் திங்கட்கிழமைகளில் இவரை அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். இதனால் மிகுந்த பலனுண்டு என்கிறார்கள் பக்தர்கள்.

 

அமைவிடம்: திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது ஆலயம். அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.