Skip to main content

ஆண்டவன் உத்தரவுப்பெட்டி சிறப்புப்பூஜை  நடைபெறும் சிவன் மலை முருகன்!

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Shiva Hill Murugan

 

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் சிவன்மலை உள்ளது. மலையின்மேலுள்ள கோவிலில் எழுந்தருளியிருப்பது சிவபெருமான் அல்ல; அவரது மகன் முருகப்பெருமான். இந்த சிவன்மலை சிவாசலம், சிவராத்திரிமலை என்றும் போற்றப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 400 அடி உயரத்தில், மலை உச்சியில் பாலசுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

 

பொதுவாக அனைத்து கோவில்களிலும் விநாயகப்பெருமானுக்கு முதலில் பூஜைகள், நிவேதனங்கள் நடைபெறும். ஆனால் சிவன்மலையில் முதல் பூஜை முருகப்பெருமானுக்கே. இங்கு விநாயகர் முருகனை வழிபடுவதாக ஐதீகம். இக்கோவிலில் கிழக்கு முகமாக சனி பகவான் காட்சி தருவது தனிச்சிறப்பு. மேலும் பிற எட்டு கிரகங்களும் சூரியனைப் பார்த்தபடி உள்ளன.

 

வேறெந்தக் கோவில்களிலும் இல்லாத வகையில் இங்கு வேட்டு (வெடி) வைத்து வழிபடுகிறார்கள். இதற்கான இடம் மலை மீது உள்ளது. இந்த வழிபாட்டினால் தீய சக்திகள் அண்டாது என்று கூறப்படுகிறது. இந்த சிவன்மலை, சிவவாக்கிய சித்தருடன் தொடர்புடையது என்று தலபுராணம் கூறுகிறது.

 

சிவபெருமான் இமயமலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முற்பட்டபோது, அதிலிருந்து விழுந்த சிறுதுண்டுதான் சிவன்மலை என்றும், ஆஞ்சனேயர் சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச்சென்றபோது அதிலிருந்து விழுந்த துண்டு என்றும் கருதப்படுகிறது. மேலும், சிவவாக்கிய சித்தருக்கு முருகப்பெருமான் அருள்புரிந்ததால் சிவன்மலை என்று பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகிறது. முருகப்பெருமான் ஒருமுகம், நான்கு கரங்கள் கொண்டு மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

 

சிவன்மலையில் தைப்பூசத்திருவிழா முக்கிய விழாவாகும். அப்போது, அனைத்து நிகழ்ச்சிகளும் மலையடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும். தைப்பூசத்திலிருந்து மூன்று நாட்கள், உற்சவர் சுப்பிரமணியசுவாமி, வள்ளி - தெய்வானையுடன் தேரில் அமர்ந்து சிவன்மலையைச் சுற்றி வலம்வருவார். அதாவது தன்னைத்தானே சுற்றி வருகிறார் என்பார்கள். இப்படி முருகன் கிரிவலம் வரும் காட்சி அற்புதமானது என்பதால், முருகப்பெருமானுடன் பக்தர்களும் கிரிவலம் வந்து பேறுகள் பல பெறுகிறார்கள். இதனால் செவ்வாய் தோஷம் நீங்கும். மனநோய் குணமாகும். உடல் வளம்பெறும் என்பது ஐதீகம்.

 

இங்கு சிவவாக்கிய சித்தர் தங்கிய குகை இருப்பது தனிச்சிறப்பாகும். நள்ளிரவில் சித்தர் பெருமான் முருகனைப் பூஜிப்பதாக ஐதீகம். இந்த முருகப்பெருமானின் தனிச்சிறப்பு என்னவென்றால், நடக்கவிருப்பதை பக்தர்களின் கனவில் வந்து முன்கூட்டியே கூறுகிறார் என்பதே.

 

மலைமீது கோவிலில் "ஆண்டவன் உத்தரவுப்பெட்டி' வைக்கப்பட்டுள்ளது. "ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில், பக்தர்கள் கொண்டுவரும் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப்பூஜை செய்வது வழக்கம். இது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருகிறது. அந்தவகையில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டியில் தங்கம், தண்ணீர், மணல், உப்பு, பூமாலை, துளசி உட்பட நூற்றுக்கும் அதிகமான பொருட்கள் வைத்துப் பூஜை செய்யப்பட்டுள்ளன.

 

சில வருடங்களுக்குமுன், ஒரு பக்தரின் கனவில் வந்து அரைப்பவுன் தங்கத்தை வைத்துப் பூஜை செய்யுமாறு சொன்னாராம் முருகன். அதேபோல் பூஜை செய்ததில் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்ததாம். இதேபோல், ஒரு அன்பர் கனவில் மணல் வைத்துப் பூஜை செய்ய அருளினாராம். அதன்விளைவால் இந்தப் பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்ததாம்.

 

கனவில் சுவாமி சொன்னதை, அந்த நபர் கோவில் நிர்வாகியிடம் வந்து தெரிவிப்பார். அவர் சொல்வது உண்மைதானா என்று தெரிந்துகொள்ள முருகன் முன்பு, பூக்களைப் பொட்டலத்தில் வைத்து "பூச்சயனம்' கேட்பார்கள். அதில் முதல் எடுப்பிலேயே வெள்ளைநிறப் பூக்கள் வந்தால், முருகன் கனவில் கூறியது உண்மைதான் என்று உறுதிகொண்டு, அந்தப் பொருளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து ஆண்டவன் பெட்டியில் வைத்துவிடுவார்கள். தற்போது, அந்தப்பெட்டியில் பச்சரிசி வைக்கப்பட்டுள்ளதாம். இது நல்ல சகுனம். நாட்டில் விவசாயம் செழிக்கும். அனைவரும் சுபிட்சமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இப்படி ஆண்டவன் உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் கிடையாதாம். இன்னொரு பக்தர் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும்வரையில் பழைய பொருளே பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம். அவ்வாறு வைத்துப் பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது சிவன்மலை அடிவாரத்திலுள்ள சிவாலயத்தில் சிவராத்திரி, பிரதோஷ நிகழ்வுகள் கொண்ட பூஜைகள் அனைத்தும் நடைபெறுகின்றன. இதேபோல், மலைமேல் கோவில் கொண்டிருக்கும் முருகப்பெருமானுக்கு தைக்கிருத்திகை, தைப்பூசம், விசாகத்திருவிழா ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. தைப்பூசத் தன்று கிரிவலம் வரும் சிவன்மலை முருகப்பெருமானுடன், பக்தர்களும் கிரிவலம் வந்து சுகம் காண்கிறார்கள்.


- பொன்மலை பரிமளம்