Skip to main content

”தமிழகத்தை ஆன்மீக பூமி என்று சொல்ல இதுதான் காரணம்” - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், திருநாவுக்கரசரின் மறுபிறவி ஆசை குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

அன்னைத் தமிழில் இருப்பது மாதிரியான பக்தி இலக்கியங்கள் உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை. அதனால்தான் தமிழகத்தை ஆன்மிக பூமி என்று சொல்கிறார்கள். செம்மொழியாக தமிழ் இன்று உச்சம் அடைந்திருக்கிறது என்றால் அதற்கு ஆரமாகவும் ஆபரணமாகவும் இருந்தது சமயக்குறவர்கள் தந்த மகத்தான பக்தி இலக்கியங்களே. அவர்கள் மக்களின் மனவோட்டத்தில் என்ன எண்ணவோட்டம் இருக்குமோ, அந்த மொழியை சரியாக உள்வாங்கிக்கொண்டு சிந்தித்தார்கள். 

 

பாவமன்னிப்பு கேட்பது கிறிஸ்தவம். கடைசி நாள் இறுதி தீர்ப்பு நாள் வரும் என்கிறது இஸ்லாம். இந்தப் பிறவியோடு என்னுடைய பிறவி முடியவேண்டும், இன்னொரு பிறவி எனக்கு கூடாது என்று சைவம், வைணவம், கானபத்தியம் கூறுகின்றன. பிறவியை அறுப்பதுதான் கடவுளை வழிபடுவதற்கான நோக்கம் என்றும் அவை வலியுறுத்துகின்றன. ஆனால், அடியர் திருநாவுக்கரசர் எனக்கு இன்னொரு பிறவி வேண்டும் எனக் கேட்கிறார். பிறவியை ஒழிப்பதற்காக வந்தவர்கள், பிறவிப்பெருங்கடல் நீந்த வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள், அதற்காகவே சிவம் எனும் செம்பொருளை ஆராதித்து மகிழ்ந்தவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், எனக்கு இன்னொரு பிறவி வேண்டும் எனக் கேட்கிறார்.

 

அழகை ஆராதிப்பது என்பது மனித இயல்புகளுள் ஒன்று. அந்த வகையில், சிவனின் அழகை கண்குளிர ஆராதிக்கிறார் திருநாவுக்கரசர். ஒரு காலை தூக்கிக்கொண்டு தில்லை நடராஜர் காட்சியளிப்பதைப் பார்க்கும்போது பக்தி இல்லாதவர்களுக்குகூட ஒரு பரவசம் ஏற்படும். தில்லை நடராஜரின் அந்த அழகைக் கண்டு உன்னைப் பார்ப்பதற்காக எனக்கு இன்னொரு பிறவி வேண்டும் எனக் கேட்கிறார் திருநாவுக்கரசர். 

 

இன்னுமொரு பிறவி வந்தாலும் நீதான் எனக்கு வேண்டும் என்று காதலர்கள் கூறிக்கொள்கிறார்களே, அந்த மக்கள் மொழியை சமயகுறவர்கள் விட்டுவிட இல்லை, விட்டுவிலகிவிடவும் இல்லை. நடராஜரின் அழகை,   

 

”குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே”

 

எனத் திருநாவுக்கரசர் பாடுகிறார். சராசரி மனிதர்களின் ஆசைகளை, அபிலாஷைகளை அடியார்களும் எதிரொலிக்கும் அணுகுமுறை பக்தி இலக்கியம் முழுமைக்கும் காணப்படுகிறது.