Skip to main content

"நல்ல நேரம் பார்ப்பதை ஆறாம் நூற்றாண்டிலேயே எதிர்த்த திருஞானசம்பந்தர்" - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழர் வரலாறு 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நல்ல நேரம் பார்ப்பதை 10 வயது சிறுவனாக இருந்தபோதே திருஞானசம்பந்தர் எதிர்த்தது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

தமிழர்களின் வரலாற்றில் சமயகாலம் என்கிற காலம் கல்வெட்டுபோல பல செய்திகளை உலகத்திற்கு தந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அவை நடைமுறைக்கு வருமா என்று யோசித்துப் பார்ப்பதற்கு முன்னால் அந்தச் சமய கால சரித்திரத்தில் என்ன நிகழ்ந்தது என்று எண்ணிப் பார்ப்போம். இன்றைக்கு குறி கேட்காத ஆட்களே இல்லை. ஜாதகம் பார்ப்பதற்கு என்று ஜோதிடசாலைகள் இன்று நிறைந்துள்ளன. காலையில் தொலைக்காட்சியை ஆன் செய்தால் ஜோதிடர் என்ற பெயரில் நமக்கு நல்ல நேரம் இருக்கிறதா இல்லையா என்று சிலர் சொல்கிறார்கள். இதைப் பார்ப்பதற்கென்று அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் பிரத்யேகமாக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதை நம்பலாமா என்று கேட்டால் அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. நல்ல நாள் பார்ப்பதும், நல்ல நேரம் பார்ப்பதும் வாழ்க்கைமுறை ஆகிவிடும் என்றால் இன்றைக்கு உள்ள உலகத்தில் வாழ்வதற்கே நாம் தகுதியற்றவர்களாக மாறிவிடுவோம். அடிபட்டு ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோது அறுவை சிகிச்சை செய்வதற்கு நல்ல நேரம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. 

 

இறைவன் மீது நம்பிக்கை வைத்து இயங்கியவர்கள் நல்ல நாள் பார்த்துதான் அனைத்தையும் செய்தார்களா என்றால் இல்லை. நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டியதில்லை என்று அன்றைக்கே அவர்கள் புரட்சி செய்துள்ளார்கள். இன்றைய வேதாரண்யமும் அன்றைய திருமறைக்காடுமான திருத்தலத்தில் பாட்டு பாடினால் கதவு திறக்கிறது. திறந்த கதவை மூடுவதற்கு மீண்டும் பாட்டு பாடினார்கள். அந்தப் பாடலைப் பாடியவர்கள் அப்பரும் சம்பந்தரும்தான். அப்போது திருஞானசம்பந்தர், நான் மதுரைக்கு புறப்படுகிறேன் என்று திருநாவுக்கரசரிடம் கூறுகிறார். அதற்கு திருநாவுக்கரசர் இன்றைக்கு நாளும் கோளும் சரியில்லை என்பதால் மதுரைக்கு போகவேண்டாம் என்கிறார். 

 

'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே னுளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே' என்ற பதிகத்தை பாடிவிட்டு புறப்பட்டால் நாளும் கோளும் என்னை எதுவும் செய்யாது என்று ஞானசம்பந்தர் கூறுகிறார். இறைவனை நம்பி பயணத்தை தொடங்கியவனுக்கு எதிரில் வருவதெல்லாம் வெளிச்சமாகத்தான் இருக்குமேயொழிய இருள் சூழ்வதற்கு வாய்ப்பேயில்லை என்று அவர் நம்பினார். 

 

 

 

மதுரைக்கு போகாதே என்று சொல்லும் திருநாவுக்கரசருக்கு வயது 90. மதுரைக்கு கிளம்பிய திருஞானசம்பந்தருக்கு வயது 10. இறைவன் மீது கொண்ட நம்பிக்கையின் உச்சமாக திருஞான சம்பந்தர் இருந்திருக்கிறார். விண்ணிலிருந்து மண்ணுக்கும் மண்ணிலிருந்து விண்ணுக்கும் ஏவுகணையை ஏவுகின்ற இன்றைய காலத்திலும்கூட, செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும், வசிக்க முடியும் என்று அறிவியல் நிரூபித்துக்கொண்டிருக்கிற இன்றைய காலத்திலும்கூட நாம் நாளும் கோளும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வெளியே செல்வதற்கு நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், ஆறாம் நூற்றாண்டிலேயே நாளும் கோளும் எதுவும் செய்யாது நான் பயணத்தை தொடங்குகிறேன் என்று ஞானசம்பந்தர் புறப்பட்டார் என்றால் அதற்கு இறைவன் மீது அவர் கொண்ட நம்பிக்கைதான் காரணம்.