Skip to main content

மதம் மாறிய திருநாவுக்கரசருக்கு இறைவன் அளித்த விநோத பரிசு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், சமண சமயத்திற்கு மாறிய திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்பிவந்தது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்று இவ்வுலகத் தியற்கை' என்றார்கள். கணவன் இருக்கும்போதே இன்னொருவருடன் உடலுறவு கொள்வது என்பது நாளேடுகளில் இன்றைக்கு தலைப்புச் செய்திகளாகிவிட்டன. அண்ணனை தம்பி கொல்வதும் தம்பியை அண்ணன் வெட்டிச் சாய்ப்பதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன. இப்போதுவரும் பத்திரிகைகளைப் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது, கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை இனி வசமாகாதா என்று யோசிக்கும் அளவிற்கு இந்த மனிதச் சமூகத்தின் நிலை உள்ளது. அன்றைக்கு நம்முடைய சமயகாலத்தில் ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். 

 

திருநாவுக்கரசரர் என்ற நாயன்மாருக்கு ஒரு தமக்கை இருந்தார். அவர் பெயர் திலகவதி. திருநாவுக்கரசர் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறிவிடுகிறார். சைவத்திற்கும் சமணத்திற்கும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அவர் சமணத்தில் இணைந்ததை நினைத்து அவரது சகோதரி திலகவதி கவலைப்படுகிறார். என் தம்பி சமண சமயத்தில் சேர்ந்துவிட்டான். நான் சோர்ந்துவிட்டேன். என்னுடைய தம்பியை விடுதலை பெற்றுத்தா என்று கோவிலில் பூக்களால் தினசரி அர்ச்சனை செய்து இறைவனை வேண்டுகிறாள். திலகவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே மணமுடிக்க இருந்தவன் இறந்துவிடுகிறான். எனக்கென்று பார்த்த மாப்பிள்ளையைக் காலம் கவர்ந்து சென்ற பிறகு இனி எனக்கு கல்யாணமே வேண்டாம் என திலகவதி முடிவெடுத்துவிடுகிறார். திலகவதியும் அவனும் ஒருவருக்கொருவர் சந்தித்ததோ பழகியதோ இல்லை. ஆனால், தனக்கு கணவனாக வரவேண்டியவன் கல்லறைக் குயிலாகினான் என்பதை அறிந்து தனக்கு திருமணமே வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். இப்படி குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என உதறி எறிந்துவிட்ட திலகவதி, தற்போது சகோதரனும் இல்லையா என்று அழுக ஆரம்பித்துவிடுகிறாள். அவளின் தொடர் பிரார்த்தனையின் விளைவாக, சமண சமயத்தை உதறிவிட்டு மீண்டும் சைவ சமயத்திற்கு வந்துவிடுகிறார் திருநாவுக்கரசர். அவரின் இந்தச் செயல் சமண சமயத்தை சேர்ந்தவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைய பல்லவ மன்னர்கள் அனைவரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் திருநாவுக்கரசருக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தனர். அந்த எல்லா நெருக்கடிகளையும் துணிச்சலுடன் அவர் எதிர்கொண்டார்.

 

திலகவதியின் பிரார்த்தனைதான் அவரை மீண்டும் சைவ சமயத்திற்கு கொண்டுவந்தது. திலகவதியின் குரலைக் கேட்ட இறைவன், உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்கிறார். எனக்கு என் தம்பி வேண்டும் என்று அவர் கூற, உன் தம்பி நிச்சயம் வருவான் என்று கூறிய இறைவன், திருநாவுக்கரசர் திரும்பி வரவேண்டும் என்பதற்காக அவருக்கு சூலை நோய் என்ற நோயை பரிசாகக் கொடுத்தான்.  திருநாவுக்கரசருக்கு நோய் வந்த பிறகு சமணர்கள் தங்களிடம் உள்ள அனைத்து மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். சமணர்கள் படித்த எந்த வித்தையும் பலிக்கவில்லை. அவர்கள் எடுத்த எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. எந்த மருந்தும் பலனளிக்காததால் தன்னுடைய உயிரைக் குடித்துக்கொண்டிருக்கிற இந்த நோயிலிருந்து விடுபட சைவ மதத்திற்கு மாறினார் திருநாவுக்கரசர். தம்பியே உலகம் என்று கருதிய ஒரு தமக்கை, தன்னுடைய தம்பியை காப்பாற்றுவதற்காக தவம் செய்து உருகினாள். 

 

திருநாவுக்கரசர் எப்படி அப்பர் ஆனார்? அவருடைய தேவாரத்திற்கு எப்படி மரியாதை வந்தது? சமய உலகத்தில் மிகப்பெரிய புகழ் அவருக்கு எப்படி வந்தது? கட்சி மாறுவதைப்போல சமயம் மாறிய ஒருவர் எப்படி அடியார் ஆனார்? இவை அனைத்திற்கும் பின்புலமாக இருந்தது ஒரு அக்கா. இதை  பெரியபுராணத்தில் 'தம்பியர் மீது வைத்த தயவினாலே' என்று சேக்கிழார் பதிவு செய்துள்ளார். யார் மீதாவது தயவு காட்ட வேண்டும் என்ற எண்ணம் இன்றைக்கு அரிதாகிவிட்ட சூழலில், தம்பியின் மீது தமக்கை வைத்த தயவினால் தம்பி தலைநிமிர்ந்தான் என்ற செய்தியை படிக்கிறபோது வியப்பாக உள்ளது.