Skip to main content

பெண்ணுக்கு கிடைத்த உயர்ந்த பதவி; பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல்முறை!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
woman oath chief minister in punjab pakistan

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

அதன்படி நடைபெற்ற இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நடந்து முடிந்த பிறகு, புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அந்த வகையில், நவாஸ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் நடந்த அதே நாளில் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில், பஞ்சாப்பில் நடைபெற்ற இந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 137 இடங்களிலும், இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 113 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் வரலாற்றில் பெண் ஒருவர் மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில், நேற்று (26-02-24) மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின், முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற பிறகு அவர் பேசுகையில், “என்னுடைய தந்தை அமர்ந்திருந்த ஆசனத்தில் இப்போது அமர்ந்துள்ளேன். இந்த பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த பெருமை. பெண் தலைமைத்துவம் என்ற நடைமுறை, எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்