கிருமிநாசினி சிகிச்சை குறித்து ட்ரம்ப் பேசிய சர்ச்சை வீடியோவை நீக்குவது கடினம் என ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் குறித்து அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஐசோபுரொபைல் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியைக் கொண்டு பொருட்களைச் சுத்தம் செய்தால், 30 வினாடிகளில் கரோனா வைரஸ் இறந்துவிடும் எனக் கண்டறியப்பட்டது. இது குறித்துப் பேசிய ட்ரம்ப், கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்திச் சிகிச்சையளிக்க முடியுமா எனப் பத்திரிகையாளர்களிடம் கிண்டலாகக் கேட்டார். ஆனால் அவரின் இந்த யோசனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்த முடியுமா எனக் கிண்டலுக்காகத்தான் கேட்டேன் என அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் அவர் பேச்சு குறித்த சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது. மேலும், அவர் இதுகுறித்து பேசிய வீடியோக்களை ட்விட்டரில் இருந்து நீக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், வீடியோவை நீக்குவது கடினம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்த ட்விட்டரின் பதிலில், "கோவிட்-19 தொடர்பான ட்வீட்டோ, ஹாஷ்டேக் அல்லது மற்றவர்களுக்கு ஆபத்தான முன்னெச்சரிக்கை முறைகளைச் செய்யத்தூண்டுவது போன்ற விஷயங்களைக் கொண்ட ட்வீட்கள் உடனடியாக நீக்கப்படும். அதே நேரத்தில் கோவிட்-19 பற்றிய தவறான தகவல்கள் இருக்கும் ஒவ்வொரு ட்வீட்டையும் நீக்க முடியும். கோடிக்கணக்கானோர் இயங்கும், வெளிப்படையாகச் செயல்படும் எங்களது தளத்தில், இப்படிச் செய்வது மிகப்பெரிய வேலை. மேலும், அப்படிச் செய்தால் அது நடந்து கொண்டிருக்கும் பல (முறையான) உரையாடல்களையும் கட்டுப்படுத்தும்.
மற்றவர்களை இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று சொல்லவில்லை என்றால், அப்படிப்பட்ட ட்வீட்கள் எங்கள் விதிகளை மீறவில்லை என்றே கருதப்படும். கோவிட்-19 பற்றி உரையாட நிறையப் பேர் ட்விட்டருக்கு வருகின்றனர். அவர்களுக்குச் சரியான தகவல் தர வேண்டும் என்று நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆபத்தை ஏற்படுத்தும் ட்வீட்களை நீக்குகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.