Skip to main content

"நாடு நம் கண்களுக்கு முன்பே அழிகிறது" - ட்ரம்ப் வேதனை!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

donald trump

 

அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபைக்கான இடைத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து குடியரசுக் கட்சி அத்தேர்தலுக்கான பணிகளில் இறங்கியுள்ளது. இந்தநிலையில் குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடக்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது அவர், ஜோ பைடனின் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

 

இதுதொடர்பாக அவர், "நம் நாடு நம் கண்களுக்கு முன்பே அழிக்கப்படுகிறது. குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காவல் துறை சீர்குலைக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார். அமெரிக்க எல்லைகளில் சட்டவிரோத குடியேற்றங்கள் அதிகரிப்பதாகக் கூறிய ட்ரம்ப், இது 'பைடன் பேரழிவுகளின் தொடக்கம்' என விமர்சித்தார். மேலும், "அமெரிக்காவில் போதை மருந்துகள் அதிகரித்து வருகிறது. எரிவாயு விலை உயர்ந்து கொண்டிருக்கின்றன. நமது தொழில்கள் வெளிநாட்டு சைபர் தாக்குதல்களால்  கொள்ளையடிக்கப்படுகின்றன" எனக் கூறினார். 

 

பாரிஸ் கால ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததற்காகவும், பெருநிறுவன வரியை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்காகவும் ட்ரம்ப் பைடனை விமர்சித்தார். தொடர்ந்து அவர், சீனா கரோனா பெருந்தொற்றுக்காக இழப்பீடு தரவேண்டும் எனவும் அக்கூட்டத்தில் பேசினார். இதுதொடர்பாக அவர், "அமெரிக்கா மற்றும் உலகநாடுகள் கரோனா பரவலுக்குச் சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுப்பேற்கச் சொல்வதற்கும், அதனிடமிருந்து இழப்பீடு கேட்பதற்கும் நேரம் வந்துவிட்டது. நாம் அனைவரும் ஒற்றைக்குரலில், சீனா கண்டிப்பாக இழப்பீடு செலுத்தவேண்டும் என அறிவிக்கவேண்டும். அவர்கள் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார். இதற்காக சீனா 10 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதல் வரியோடு தரவேண்டும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்