Skip to main content

அதிபர் தேர்தல் தோல்விக்கு பிறகு ட்ரம்ப் தயாரித்த அதிர்ச்சி உத்தரவு!

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

trump

 

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதற்கிடையே அமெரிக்காவின் அதிபராக இருந்த ட்ரம்ப் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, முடிவுகளை ஏற்க மறுத்து வருகிறார்.

 

இதற்கிடையே அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்க, அமெரிக்க நாடாளுமன்றம் கடந்தாண்டு ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை ட்ரம்ப் தூண்டியதாக கூறப்படும் நிலையில், இந்த குற்றச்சாட்டினை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தேர்வு குழு விசாரித்து வருகிறது.

 

இந்தநிலையில் இந்த விசாரணைக்காக அமெரிக்காவின் தேசிய ஆவணக்காப்பகம், தேர்வு குழுவிடம் சமர்ப்பித்த ட்ரம்பின் வரைவு நிர்வாக உத்தரவை பொலிட்டிக்கோ என்ற ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது. டிசம்பர் 16 தேதியிடப்பட்ட அந்த வரைவு நிர்வாக உத்தரவு, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளரை, வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற பணிக்கிறது. மேலும் அதிபர் தேர்தல் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரையும் நியமிக்கிறது.

 

ஆனால் இந்த வரைவு நிர்வாக உத்தரவில் என்ன காரணத்தினாலோ ட்ரம்ப் கையெழுத்திடவில்லை. ஒருவேளை இதில் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அந்த நிர்வாக உத்தரவு அமலுக்கு வந்திருந்தால், ட்ரம்ப் கடந்தாண்டு பிப்ரவரியின் நடுப்பகுதி வரை அமெரிக்காவின் அதிபராக இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

 

அதேநேரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தேர்வுக்குழு நாடாளுமன்ற வன்முறை குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வரைவு நிர்வாக உத்தரவு, ட்ரம்பிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்