Skip to main content

லெபனானில் இருந்து திடீர் தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி - மத்திய கிழக்கில் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rocket attack from Lebanon towards Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர்  இன்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்ட நிலையில் அதனை இஸ்ரேல் நடு வானிலேயே தடுத்து தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறி வைத்து, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட மற்றும் பதிப்பு நிலவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்த மாதிரியான பதிலடித் தாக்குதலை கொடுக்க போகிறார்கள் என்று மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சார்ந்த செய்திகள்