நியூஸிலாந்து நாட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கரோனா நோயாளியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பல நாடுகளைத் திணறடித்து கொண்டிருக்கும் கரோனா வைரஸ், இதுவரை 53 லட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது, 3.57 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரைப் பறித்துள்ளது. இந்நிலையில் ஆரம்பம் முதலே கரோனா வைரஸ் பரவலைத் திறமையாகக் கையாண்ட நியூஸிலாந்து நாட்டில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கரோனா நோயாளியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 26 அன்று முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அன்றிலிருந்து தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் அந்நாட்டுப் பிரதமர் ஜெஸிந்தா. மார்ச் 19 க்குள் அதன் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு மார்ச் 26 முதல் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மொத்தம் அந்நாட்டில் இதுவரை நோய்ப் பாதித்தோருடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் 2,67,435 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், NZ COVID Tracer என்ற செயலியின் மூலம் மக்களின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தொற்று மெல்ல கட்டுப்பாட்டிற்குள் வந்து கடந்த ஆறு நாட்களாக அந்நாட்டில் ஒரு புதிய கரோனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை. இதுவரை அந்நாட்டில் கரோனா வைரஸால் 22 பேர் மட்டுமே பலியாகியுள்ள சூழலில், கரோனாவால் பாதிக்கப்பட்டு அந்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது அல்லாமல் மேலும் 21 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கரோனாவின் பிடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில், துரித செயல்பாட்டால் குறைந்த பாதிப்புகளுடன், விரைவாகத் தாக்கத்திலிருந்து மீண்டு உலக நாடுகள் அனைத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது நியூஸிலாந்து.