Skip to main content

“இஸ்ரேலுடன் போரை விரும்பவில்லை” - லெபனான்

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

 Lebanon says it does not want conflict with Israel

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 1 வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.

 

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இது மட்டுமின்றி அண்டை நாடான சிரியா மீது ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 7 ஆம்  தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிரியா நாட்டிலிருந்தும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையம் மற்றும் அலொப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

 

அதேபோன்று இஸ்ரேலின் மற்றொரு முனையில் உள்ள லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். இதன் காரணமாக, லெபனான் எல்லையில் இருக்கும் 1 லட்சம் இஸ்ரேல் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் போரிட நினைத்தால் அது இரண்டாவது லெபனான் போராக இருக்கும் என பிரதமர் நெதன்யாகு எச்சரித்திருந்த நிலையில், தற்போது லெபனான், இஸ்ரேலுடன் போரை விரும்பவில்லை என லெபனான் அமைச்சர் ஜியாத் மக்காரி தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக ரஷ்ய அரசு ஊடகத்திடம் பேசிய ஜியாத் மக்காரி, “இஸ்ரேல் ஒருபோதும் அச்சுறுத்தல்களை குறைக்கவில்லை; ஒவ்வொரு வாரமும் இஸ்ரேல் அரசியல் தலைவர்களோ, ராணுவ அதிகாரிகளோ லெபனானை அச்சுறுத்தி வருகின்றனர். எங்கள் நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்ல இஸ்ரேல் முயற்சித்து வருகிறது.  ஹிஸ்புல்லா அமைப்பின் மீது நீங்கள் சண்டை  நடத்திக் கொள்ளுங்கள்; ஆனால் லெபனான் போரை விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அதுமட்டுமில்லாமல் இஸ்ரேல் பிரதமர் தனது சொந்த காரணத்திற்காக போரை விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்