வடகொரியாவின் கேசாங் நகரத்தில் உள்ள ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நகரத்தை முடக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களைப் பாதித்துள்ள கரோனா வைரஸ், 6.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்துள்ளது. பெரும்பாலான உலக நாடுகள் இந்த வைரஸின் தாக்கத்திற்கு ஆளாகிவந்த நிலையில், தங்கள் நாட்டில் கரோனா பாதிப்பு இல்லை எனக்கூறி வந்தது வடகொரியா. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சூழலிலும், தங்களது நாட்டில் கரோனாவால் ஒருவர்கூட பாதிக்கப்பட்டதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரமான கேசாங்கில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்குமுன் தென்கொரியாவுக்கு தப்பிச்சென்று, அந்நாட்டில் வசித்துவந்த வடகொரியாவைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரத்தில் வடகொரியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அவருக்கு கரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவரோடு தொடர்பிலிருந்த நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கடந்த ஐந்து நாட்களாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கேசாங் நகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நகரின் எல்லைகள் அனைத்தும் சீல் வைக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.