ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை உக்ரைனைத் தாக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைன் நகரங்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன், ”புதின் பேரழிவுகரமான உயிர் இழப்பு மற்றும் மனித துயரங்களை ஏற்படுத்தும் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த தாக்குதலால் நிகழும் மரணங்களுக்கும், அழிவுகளுக்கும் ரஷ்யா மட்டுமே பொறுப்பாகும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கூட்டாளிகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான வழியில் ரஷ்யாவிற்கு பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் புதின் ஜி 7 நாடுகளுடன் ஆலோசித்து ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன.