இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 1 வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் பெண் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் அளித்துள்ளது. இது தொடர்பான தகவலின்படி, கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஜமிலா அப்துல்லா என்பவர் பாலஸ்தீன சட்ட சபையின் உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர், ஹமாஸின் முக்கிய தலைவரான அப்தெல் அஜிஸ் அல்-ராண்டிசியின் மனைவி ஆவார். ஏற்கனவே ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சரான ஜவாத் அபு ஷமாலாவை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.