பாகிஸ்தான் பங்குச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற தாக்குதலின் பின்னனியில் இந்தியா இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை கட்டிட வளாகத்தில், கடந்த திங்கள்கிழமை மதியம் திடீரென நுழைந்த ஆயுதமேந்திய நான்கு பயங்கரவாதிகள் அப்பகுதியில் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது அங்குக் காவலிலிருந்த பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் பலியான நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா தான் உள்ளது எனப் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், இந்தியா தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான், “இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடந்த சில மாதங்களாகவே என் அமைச்சரவைக்கு இந்தத் தாக்குதல் திட்டம் குறித்துத் தெரியும். நான் என் அமைச்சர்களிடத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்தேன். எங்கள் முகமைகள் அனைத்தும் உஷார் நிலையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார். இந்தியா தரப்பில் ஏற்கனவே குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ள நிலையில், இம்ரான்கானின் இந்தப் பேச்சு அரசியல் ஆதாயத்திற்காகவே எனக் கருத்து எழுந்துள்ளது.