இந்தியாவிற்கு வந்த சர்வதேச கப்பலை ஏமன் நாட்டில் இயங்கும் ஹவுதி படை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கடல் வழித்தடமான செங்கடல் ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களுக்கு இடையே இந்திய பெருங்கடலுக்கு நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ’கேலக்ஸி லீடர்’ சரக்கு கப்பல் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. 25 பயணிகளுடன் பயணித்த இந்த கப்பலை செங்கடலில் ஏமன் நாட்டில் இயங்கும் ஹவுதி படையினர் கடத்தினர். கடத்தப்பட்ட அந்த கப்பலும், அதில் இருந்த பணியாளர்களும் இப்போது ஏமன் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ஹவுதி படை வெளியிட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில், ஹெலிகாப்டரில் வந்த ஆயுதப் படையினர், கப்பலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி இந்த கடத்தல் சம்பவத்தை நடத்தியுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையே, காசாவில் ஹமாஸ் படையினருக்கு எதிரான போரை இஸ்ரேல் கைவிடும் வரை சர்வதேச கடல் வழித்தடத்தில் இஸ்ரேல் நாட்டு தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் வெளியிட்டுள்ள குறிப்பில், ‘பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கும் அந்த கப்பலை கடத்தி ஏமன் மிகப்பெரிய சர்வதேச குற்றம் புரிந்ததோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளது. இது ஈரானின் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு’ என்று கூறியுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு ஜப்பான் நாடும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.