Skip to main content

புதிய கரோனா திரிபால் பரபரக்கும் நாடுகள்... சிறப்பு கூட்டம் நடத்தும் WHO  - காரணம் என்ன?

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

CORONA

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாக பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தப் புதிய வகை கரோனா திரிபு, நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரின் நாள்பட்ட தொற்றிலிருந்து உருவாகியிருக்கலாம் எனவும், அந்த நபர் எச்.ஐ.வி. நோய்க்கு சிகிச்சை எடுக்காத நபராக இருந்திருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்தப் புதிய கரோனா திரிபு, போட்ஸ்வானா நாட்டிற்கும் பரவியுள்ளது. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஹாங்காங் வந்த இருவருக்கும், மலாவியிலிருந்து இஸ்ரேல் திரும்பிய ஒருவருக்கும் இந்தப் புதிய வகை கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் வருபவர்களுக்குத் தீவிர சோதனைகள் நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிரிட்டன், சிங்கப்பூர், இஸ்ரேல், இத்தாலி ஆகிய நாடுகள் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்தும், அதைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

 

அதேபோல் ஜெர்மன், தென்னாப்பிரிக்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வர கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்க தனது உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

 

இதற்கிடையே இந்தப் புதிய வகை கரோனா திரிபு குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு இன்று (26.11.2021) அழைப்பு விடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்