Skip to main content

ரசாயன தாக்குதலுக்கு சிரியா, ரஷ்யா மிகப்பெரிய விலை தர நேரிடும்! - ட்ரம்ப் எச்சரிக்கை

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

சிரியாவில் அப்பாவி மக்களின் மீது ரசாயன தாக்குதல் நடத்திய சிரியா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் இருந்து கிளர்ச்சியாளர்களை முழுவதுமாக வெளியேற்றி, அந்தப் பகுதியைக் கைப்பற்றிவிட்டதாக சிரியா ராணுவம் சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் உள்ள டவுமா நகரில் சிரியா ராணுவம் வான்வெளித் தாக்குதலில் ஈடுபட்டது. ரசாயன குண்டு மழை பொழிந்த சில நிமிடங்களில், அந்த நகரமே மயானம் போல காட்சியளித்தது. 

 

 

இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மூக்கு மற்றும் வாய் வழியாக நுரை கக்கிய நிலையில், பலர் பிணங்களாகவும், சுயநினைவின்றி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காட்சிகளையும் ஒயிட் ஹெல்மெட் பாதுகாப்புக் குழு தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு வருகிறது.

 

இந்நிலையில், இந்தக் கொடூர தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘சமீபத்தில் சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதலில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மிருகத்தன்மை கொண்ட ஆசாத்துக்கு உதவிய ரஷ்யா மற்றும் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டிய சூழல் வரும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்