சவூதி மன்னர் குடும்பத்தில் 150 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,000-ஐ கடந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் சவூதி மன்னர் குடும்பத்தில் 150 பேரைப் பாதித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 2-ம் தேதி சவூதியில் கரோனா வைரஸ் நோயாளி இருப்பது உறுதி செய்யப்பட்ட சூழலில், இதுவரை அந்நாட்டில் 2,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, ரியாத்தின் ஆளுநராக இருக்கும் சவூதி மன்னர் குடும்பத்தின் இளவரசர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கரோனா வைரசுக்காகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் குடும்பத்தில் சுமார் 150 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கிங் ஃபைஸல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மன்னர் குடும்பத்திற்காகப் பிரத்தியேகமாக 500 படுக்கைகள் தயார் செய்யப் பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் மன்னர் கிங் சல்மான், இளவரசர் முகமது பின் சல்மான் பாதுகாப்பாகக் கடற்கரை பகுதியில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.