Skip to main content

பணத்திற்காக ஃபேஸ்புக்கில் ஆண்களை குறிவைக்கும் இளம் பெண் – 2 பேர் கைது 5 பேர் தலைமறைவு!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

Young woman targeting men on Facebook for money - 2 arrested 5  missing!

 

ஃபேஸ்புக் மூலம் ஆண்கள்தான் பெரும்பாலும் பெண்களுக்கு காதல் என்கிற போர்வையில் வலைவீசி  சிக்கவைத்து ஏமாற்றுவதோடு பணம், நகை பறிப்பும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. தற்போது திருச்சியில் காதல் ரசம் வீசிய ஃபேஸ்புக் இளைஞனை வரவழைத்து பெண் ஒருவர்   பணம் பிடுங்கிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவரது மகன் வினோத்குமார் வயது 31 பிளக்ஸ் தொழில் செய்கிறார். இவருக்கும், திருச்சி காஜாமலையை சேர்ந்த நசீர் அகமது என்பவரின் மகள் ரகமத்நிஷா (20) என்ற பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

 

 

ரகமத்நிஷா பேஸ்புக்கில் அதீத அன்பாக பேசி வினோத்குமாரை தன்னுடைய வலையில் சிக்க வைத்துள்ளார். இதனால் வினோத்குமார், பேஸ்புக்கில் ரகமத்நிஷாவுக்காக அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

 

தினமும் தொடர்ச்சியாக பேஸ்புக் மூலம் பேசிய நிஷா திடீர் என எவ்வித பதிவும் செய்யாமல் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு முகநூல் மூலம் மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அப்போது, ‘உங்களை நேரில் சந்திக்க ஆசையாக இருக்கிறது. நேரில் வரமுடியுமா?’ என்று ரகமத்நிஷா பேசி ஆசையை தூண்டியுள்ளார். வினோத்குமார் திக்குமுக்காடி உடனே வருகிறேன் என்று சொல்லி டூவிலரில் கடந்த 5ம் தேதி திருச்சிக்கு வந்தார்.

 

பின்னர் அவர் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகே காத்திருக்க, அப்போது அங்கே திடீர் என வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் வினோத்குமாரை குண்டுகட்டாக தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர். திருச்சி சங்கம் ஓட்டல் எதிரே உள்ள வ.உ.சி.தெருவில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று வினோத்குமாரை ஒரு அறையில் அடைத்தனர். பின்னர், அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

 

ரூ.1 லட்சம் இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையேல் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர், என்னிடம் பணம் ஏதும் இல்லை. ரகமத்நிஷாதான் என்னை வர சொன்னார் என்று சொல்ல, அந்த கும்பல் அவரது ஏ.டி.எம்.கார்டை பிடுங்கி, எவ்வளவு பணம் இருக்கிறது? என சோதித்து பார்த்தனர். அதில் தொகை குறைவாக இருந்துள்ளது.

 

உடனே, ரூ.2 லட்சம் மதிப்புள்ள அவரது டூவிலரை பறித்து கொண்டு, அய்யப்பன் கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானாவில் அவரை விட்டுச்சென்றனர்.

 

தப்பிப்பிழைத்த வினோத்குமார் பேஸ்புக் பெண் தொடர்பினால் தனக்கு ஏற்பட்ட அசிங்கத்தை   அருகில் உள்ள கண்டோன்மெண்ட் போலீஸில் புகார் செய்தார். கடத்தல் சம்பவம் கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்டது என்பதால் புகார் அங்கே கொடுக்க, கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் காஜாமலையை சேர்ந்த இளம் பெண்ணான ரகமத்நிஷாவை 7 பேர் கும்பல் ஃபேஸ்புக் மூலம் இவ்வாறு பேச வைத்து சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

இது குறித்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நிக்சன்,  இந்த வழக்கில் தொடர்புடைய ரகமத்நிஷா, கூட்டாளிகள் திருச்சி மதுரைரோடு வள்ளூவர் தெருவை சேர்ந்த முகமது ரபீக் மகன் ஆசீக் என்ற நிவாஷ் (26) மற்றும் திருச்சி பாலக்கரை கீழ படையாச்சி தெருவை சேர்ந்த முகமது பாரூக் மகன் முகமது யாசர்(22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்  எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்