Skip to main content

எழுத்தாளர் அ. வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’!

Published on 22/09/2021 | Edited on 25/09/2021

 

Writer A. Vanilla receives pudhumai pithan padaipilakiya award by SRM

 

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார்கள். அந்த வகையில் எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் இந்த ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’க்கு எழுத்தாளர் அ. வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

 

வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணித ஆசிரியரும் கவிஞருமான அ. வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் - 7, சிறுகதை நூல்கள் - 4,  கட்டுரை நூல்கள் - 6, தொகுப்பு நூல்கள் - 6, கடித நூல் - 1, நாவல் - 2 என 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தனது நூல்களுக்காக கவிதை உறவு, சிற்பி அறக்கட்டளை, தேவமகள் அறக்கட்டளை, ஏலாதி அறக்கட்டளை, திருப்பூர் அரிமா சங்கம், தமுஎகச செல்வன் கார்க்கி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஆகிய அமைப்புகள் வழங்கிய பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

2007ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் பெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டில் சர்வதேச பெண் எழுத்தாளர்கள் (ஹைதராபாத்) கலந்துகொண்ட சார்க் மாநாட்டிலும், 2011 ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான மாநாட்டிலும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார். 2010ஆம் ஆண்டில் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி அழைப்பின் பேரில் மேற்கு வங்காளம் சென்று, அங்குள்ள எழுத்தாளர்களோடும் மக்களோடும் கலந்துரையாடியுள்ளார்.

 

இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. இவரது படைப்புகளை இதுவரை 10 பேர் இளமுனைவர் (எம்.ஃபில்.,) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.ஹெச்டி.,) பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.

 

2009 - 10 வரை சமச்சீர்க் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து, புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விருது ‘சுளுந்தீ’ நாவலுக்காக அதன் ஆசிரியர் முத்துநாகுவுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்