Skip to main content

கரோனா நிவாரண நிதி பெறப்பட்ட விபரத்தை தெரியப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020
What is the difficulty in disclosing the details of the Corona Relief Fund? - High Court questions Tamil Nadu government!

 

கரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது என்பதை தெரியப்படுத்த என்ன சிரமம் உள்ளது என்று  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது.

 

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு, பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக்கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார், பயனாளிகள் யார் யார் என்பன உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. வெளிப்படைத் தன்மையைப் பேணும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில், பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகர், மற்ற மாநிலங்களில் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆனால், தமிழகத்தில்தான் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்து இணையதளத்தில் வெளியிட என்ன சிரமம் உள்ளது என்ற கேள்வியை முன்வைத்தனர். இதுகுறித்து உரிய பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 16-ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்