Skip to main content

’இந்த அரசை கவிழ்ப்பதற்காக நாங்கள் அனைத்து கட்சி கூட்டம் நடத்தவில்லை’ - ஸ்டாலின்

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

 

stalin

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  இன்று (19-02-2018) கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

 

 
மு.க.ஸ்டாலின்: கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பல்வேறு  பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று ஆய்வு செய்தேன். குறிப்பாக, கடந்த 1966 ஆம் ஆண்டு அன்றைக்கு திமுகவின் சார்பில் மேயராக இருந்த மோசஸ் அவர்களுடைய முயற்சியில்,  திரு.வி.க.நகர் பஸ் ஸ்டேண்ட் பகுதியில் இந்த சமூக நலக்கூடம் கட்டப்பட்டு, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார். கொளத்தூர் தொகுதியில் நான் முதன்முதலாக, கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பொது நலச்சங்கங்களை சேர்ந்தவர்கள், இடிந்த நிலையில் இருந்த பாழடைந்த இந்த சமூக நலக்கூடத்தை முழுதாக இடித்துவிட்டு, நடுத்தர மற்றும் ஏழை - எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளும் கொண்ட திருமண மண்டபமாக கட்டித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

 

அதனையேற்று, எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்கீடு செய்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.  ஆனால், மாநகராட்சியின் சார்பில் அதை நிறைவேற்ற முடியாமல், இடையூறு செய்து தடைபோட்டனர். எனவே, நீதிமன்றம் வரை சென்று போராடி, அதனை இப்போது நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது. அன்றைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது கட்டிடத்தை கட்டி முடிக்க ரு.3 கோடி அளவுக்கு உயர்ந்து, இப்போது அரசும், மாநகராட்சியும் அனுமதி வழங்கியிருக்கின்றன.

 

எனவே, கூடுதல் தொகையை எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த, இப்போது ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் சேர்த்து, ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா, இப்பகுதியில் இருக்கின்ற பொது நல சங்கங்களின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்று இருக்கிறது.

 

அதேபோன்று, வார்டு எண் 69க்கு உட்பட்ட திக்காகுளம் இணைப்புத் தெருவில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் சாலை போடப்பட்டிருக்கிறது. அது பயனற்ற நிலையில் இருந்ததால், சாலை வசதி ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே, 15-10-2017 அன்று எனது சொந்த செலவில் இப்பகுதியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. தற்போது, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 32 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்திருக்கிறேன்.

 

அதுமட்டுமல்ல, பந்தர் கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் ஹோம் கிளாஸ் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, ரூ.14 லட்சம் ரூபாயை எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்புதல் கடிதத்தை இன்று வழங்கினேன். அந்தப் பள்ளிக்கு தேவையான நாற்காலிகள், இருக்கைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் வழங்கினேன். எனவே, இந்தத் தொகுதிக்கு தேவைப்படும் அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் நிறைவேற்றும் முயற்சியில் நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

 

செய்தியாளர்: ஆந்திர வனப்பகுதிகளில் தமிழக கூலித் தொழிலாளர்கள் மோசமான முறையில் கொல்லப்படுவது தொடர்கிறதே? நேற்றும் 7 தமிழர்களின் உடல்கள் ஏரியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறதே?

 

ஸ்டாலின்: தமிழக அரசு இந்த விவகாரத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு, மிகுந்த கவனத்துடன் அணுகி, உண்மை நிலை குறித்து கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

செய்தியாளர்: அனைத்து கட்சி கூட்டம் நடத்தும் உங்கள் அறிவிப்பு குறித்து, அதனால் இந்த அரசை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்து இருக்கிறாரே?

 

ஸ்டாலின்: இந்த அரசை கவிழ்ப்பதற்காக நாங்கள் அனைத்து கட்சி கூட்டம் நடத்தவில்லை. மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே கூட்டுகிறோம். அந்தக் கூட்டத்திற்கு ஆளும் கட்சியான அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் கூட அழைப்பு விடுக்க முடிவு செய்திருக்கிறோம். ஆனால், கர்னாடகாவில் உள்ள கட்சிகளுக்கு இருக்கின்ற உணர்வு, இங்குள்ள குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுகவுக்கு இல்லை என்பது வெட்கக்கேடானது.

 

சார்ந்த செய்திகள்