Skip to main content

“காவல்துறை, நீதித்துறையைக் கண்டித்து போராட்டம் நடைபெறும்”- முன்னாள் எம்.எல்.ஏ. பேட்டி!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

we condemn Police and judiciary

 

திண்டுக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு ஜாமீன் வழங்கிய நீதித் துறையைக் கண்டித்தும், மாதர் சங்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும் வருகிற 11-ஆம் தேதி மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தெரிவித்தார்.

 

திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதி முருகன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சிறையில் இருந்த போது வழக்கின் தன்மையை அறியாமல் ஜாமீன் வழங்கிய நீதித்துறையை கண்டித்தும் போராட்டம் நடத்திய மாதர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் வழக்குப்பதிவு செய்யாமல், நான் உள்பட நிர்வாகிகள் 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

இந்த வழக்கில் போலீசார் மாபெரும் தவறு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஜோதி முருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யத் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதோடு வருகிற 11-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறையை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தினருடன்  பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் மற்றும்  அமிர்தம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்