விருத்தாசலம் கிளைச் சிறையில், விசாரணைக் கைதி செல்வமுருகன் மரணம் அடைந்தது குறித்து, நெய்வேலி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரியும், மறு பிரேதப் பரிசோதனை கோரியும், அவரது மனைவி பிரேமா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், செல்ஃபோன் திருட்டு வழக்கில், அக்டோபர் 28-ஆம் தேதி, நெய்வேலி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் கைதாகி, விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன், நவம்பர் 2-ஆம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல், நவம்பர் 4-ஆம் தேதி மரணமடைந்ததாக, அவரது குடும்பத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர், அவரை அடித்துச் சித்ரவதை செய்ததால் தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பல தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, செல்வமுருகனின் மனைவி பிரேமா, நவம்பர் 5-ஆம் தேதி, கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், நெய்வேலி டி.எஸ்.பி அலுவலக குற்றப்பிரிவில் உள்ள சுதாகர், அறிவழகன் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரும் புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும், தனது கணவர் செல்வமுருகனின் உடலை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில், நெய்வேலியைச் சேர்ந்த செல்வமுருகன், போலீஸ் காவலில் உயிரிழக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. செல்வமுருகன் கைது வழக்கில் தமிழக அரசு மற்றும் சி.பி.சி.ஐ.டி பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டியை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் பிரேமாவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.