Skip to main content

சகோதரி மீது காதல்; திருமணத்திற்கு மறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

villupuram kandachipuram kadayam farmer family issue

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கடையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 45). இவரது மனைவி 40 வயது கலையம்மாள் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். விவசாயியான கோவிந்தன் கிராமத்தின் அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கேயே வாழ்ந்து விவசாயம் செய்து வருகிறார்.

 

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் பாரதி (வயது 23). இவரின் தாயார் கண்ணன் சிறுவனாக இருந்தபோது இறந்துவிட்டார். அவரது தந்தை கண்ணனும் பாரதியை கண்டு கொள்ளவில்லை. சிறுவன் பாரதியை எடுத்து வளர்க்க யாரும் இல்லை. ஆதரவற்று தவித்த சிறுவன் பாரதியை கோவிந்தனும் அவரது மனைவியும் அழைத்து வந்து தங்கள் குழந்தைகளோடு குழந்தையாக வளர்த்து வந்தனர். பாரதி வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்துள்ளார். இவர் பள்ளிக்கூடம் சென்று படிக்காமல் கோவிந்தனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவருக்கு துணையாக விவசாய பணிகளை செய்து வந்துள்ளார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கி வைத்துக் கொண்டு அப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் வேட்டையாடச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கோவிந்தனின் மூத்த மகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் பாரதி. நேற்று முன்தினம் தனது வளர்ப்பு தந்தை கோவிந்தனிடம் சென்று, அவரது மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

 

அப்போது கோவிந்தன் உன்னை எனது மூன்று பிள்ளைகளுடன் சேர்த்து நான்காவது பிள்ளையாக வளர்த்து வரும் என்னிடமே திருமணத்திற்கு பெண் கேட்கலாமா எனது மகள் உனக்கு சகோதரி அல்லவா என்று எடுத்துக் கூறியுள்ளார். இதனால் கோவிந்தன் மீது பாரதிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார் கோவிந்தன். அப்போது கையில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, கோவிந்தனிடம் அவரது மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது கோவிந்தன் மகனைப் போல்  இருக்க, எனது மகள் உனக்கு சகோதரி முறை அல்லவா அப்படி கேட்பது தவறு என்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதி துப்பாக்கியால் கோவிந்தனின் தலையை  பார்த்து சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்து கோவிந்தன் கீழே விழுந்துள்ளார். கோவிந்தன் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி கலையம்மாள் வெளியே ஓடி வர அவரது காலிலும் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி உள்ளார்.

 

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வர இதைக் கண்ட பாரதி நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்துறை காப்பு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய கணவன் மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதி துப்பாக்கியினால் சுட்ட தகவல் அறிந்த விழுப்புரம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பி ஓடிய பாரதியை காப்பு காட்டில் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினரும் போலீசாரும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் அன்று இரவு ஒரு பாறையின் மீது ஏறி நின்ற பாரதி என் கிட்டே நெருங்கினால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் மேலும் கையில் நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளேன் அதை வீசி விடுவேன் என்று வனத்துறையினரையும் காவல்துறையினரையும் விரட்டி வருகிறார் பாரதி. அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் போலீசாரும் வனத்துறையினரும் பாரதியை பிடிப்பதில் திணறி வருகின்றனர். இருப்பினும் வனத்துறை காட்டில் சுற்றி வரும் பாரதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி மடக்கி கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோவிந்தன் கலையம்மாள் தம்பதிகளை அவர்கள் வீட்டில் மகன் போன்று வளர்ந்த இளைஞன், அவர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்