Skip to main content

இது விபூதி சேலஞ்ச்......

Published on 18/05/2020 | Edited on 18/05/2020


சவால் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது போல் கறுப்பு- வெள்ளை போட்டோ சேலஞ்ச், அந்தக் கால போட்டோ சேலஞ்ச் என வித விதமாகச் சேலஞ்ச்களை அறிமுகப்படுத்தி டிரெண்ட் செய்வார்கள் சமூக வலைத்தள வாசிகள்.! ஜாலி சேலஞ்ச்களை புறந்தள்ளி ஆரோக்கியத்திற்கு அக்கறைக் காட்டி சேலஞ்ச் செய்து வரும் வலைத்தள வாசிகள் இந்த முறை சேலஞ்சாக கையிலெடுத்திருப்பது நெற்றி நிறைய பட்டையுடனான விபூதி சேலஞ்சை.!
 


தங்களை மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ..? என்று கருதியே நெற்றி நிறைய விபூதி பட்டை பூசியவர்கள் இன்று பட்டையை குறுக்கி சிறு கீற்றாக விபூதியை அணிகிறார்கள். ஒரு சிலர் அதனையும் செய்வதில்லை. ஆனால் இந்த விபூதி சேலஞ்ச் வந்தவுடனே சிறியவர் தொடங்கி பெரியவர் வரை அனைவரும் நெற்றி நிறைய விபூதி பூசிய புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு, "இது எப்படி இருக்கு..? இது தான் விபூதி சேலஞ்ச் என்கிறார்கள்.

விபூதி.!

 

மரணத்திற்குப் பிறகு பின் தீயில் எரிந்து பின் கிடைப்பது பிடி சாம்பல் தான் என நினைவு கூறுவதே விபூதி தத்துவம். சைவர்களின் அடையாளமாய், திரள் செல்வத்தின் அடையாளமாய் கருதப்படுவது விபூதி. பதினென் சித்தர்களில் ஒருவரான திருமூலரோ,

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே!

என விபூதியைத் தினமும் அணிந்து வந்தால் தொல்லைகள் அனைத்தையும் அழித்து இறைவனின் திருவடி சேரலாம் என்கின்றார். சைவர்கள் விரும்பும் விபூதியைக் கல்பம், அணுகல்பம், உபகல்பம் மற்றும் அகல்பம் என நான்கு முறைகளாகப் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் கல்பம் முறை தான் தற்பொழுது அனைவராலும் விரும்பப்படுகின்றது. அதாவது, நாட்டுப் பசு மாட்டின் சாணத்தை கீழே விடாது தாமரை இலையில் பிடித்து உருண்டைகளாக்கி ஐந்து வகை பிரம்ம மந்திரங்கள் கூறி அக்கினியில் எரித்து எடுப்பது தான் கல்பம் முறை. 
 


இந்தக் கல்பம் முறையில் விபூதி தயாரித்து வரும் சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சம்பத்தோ, "அடிப்படையில் நகைத் தணிக்கையாளரான எனக்கு நாட்டு பசுமாடுகள் மேல் ஆரம்பத்திலிருந்து பிரியம். நாட்டுப் பசுமாடுகள் பண்ணை வைக்கனும்னு திட்டம் இருக்கும் போதே, பலர் பசுமாட்டின் பாலை விற்றால் உனக்கு ஒன்றும் தேறாது. நஷ்டம் தான் வரும்." என பயமுறுத்தினார்கள். பால் விற்றால் தானே நஷ்டம்.! பசுமாட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் லாபம் தானே.! என்றில்லாமல் என்னுடைய மன நிம்மதிக்காக குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு இந்தப் பண்ணையைத் துவக்கினேன். இதிலிருந்து தான் விபூதி தயாரித்து சந்தைப்படுத்தினேன். மிகுந்த லாபம் எனக்கு.!" என்றவரிடம் விபூதி சேலஞ்ச் பற்றிக் கூறியதும், "ஆரோக்கியமான விஷயம் இது.!" என்கிறார் அவர்.

எப்படி ஆரோக்கியமாகும்..?

பொதுவாக விபூதிக்கு நெற்றியிலுள்ள நீரை, வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உண்டு. இதனால் தலையிலுள்ள நீர் முற்றிலும் இழுக்கப்பட்டு தலைவலி, சளி ஏற்படாது.


 

 

சார்ந்த செய்திகள்