Skip to main content

விடுதி வசதியை ஏற்படுத்தித் தரவில்லை... வீட்டிற்குச் செல்ல முடியாமல் நடுரோட்டில் தவித்து நின்ற செவிலியர்கள்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

VELLORE DISTRICT HOSTELS GOVERMENT HOSPITALS NURSES


வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவியாக, பராமரிப்பு பணியைச் செவிலியர்கள் செய்து வந்தனர். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 44 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

இவர்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை 7 நாட்கள் அரசு காப்பகத்தில் மருத்துவக் காரணங்களுக்காக தனிமைப்படுத்தப்படுவர். இந்நிலையில் 28- ஆம் தேதி 40- க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி முடித்து வெளியே வந்துள்ளனர். அவர்களை 15 நாட்கள் அரசு காப்பகத்தில் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும், இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தான் செய்திருக்க வேண்டும். ஆனால் செவிலியர்களுக்காக மாவட்ட மற்றும் மருத்துவமனை நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யாததால் தவித்துப் போனார்கள்.

 

 


எங்கு செல்வது எனத் தெரியாமல் மருத்துவமனை அமைந்துள்ள அடுக்கம்பாறை பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றனர். இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள அணைக்கட்டு தொகுதியின் எம்எல்ஏ வும் திமுக மத்திய மாவட்டச் செயலாளருமான நந்தகுமார் எம்எல்ஏ, கரோனாவில் இரவு பகல் பாராமல் உழைத்த செவிலியர்களை நடுரோட்டில் தவிக்கவிட்ட வேலூர் மருத்துவமனை டீன் மற்றும் சுகாதாரத் துறையை கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகம் பரவாமல் தடுத்ததில் மருத்துவர்களுக்கு இணையான பங்கு நம் செவிலியர்களும் உண்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களை வீட்டுக்கு அனுப்பும் முன் மருத்துவக் காரணங்களுக்காக 7 நாள் தனிமைப் படுத்திவைக்க வேண்டும். இதற்காக மருத்துவமனை நிர்வாகம் தங்கும் இல்லம் ஏற்பாடு செய்துயிருக்க வேண்டும். இந்நிலையில், நேற்று (28/04/2020) மதியம் கரோனா வார்டு பணி முடிந்து வெளியே வந்தவர்களுக்கு அப்படி எந்த ஏற்பாடும் செய்யாத நிலையில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் அடுக்கம்பாறை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.

 

http://onelink.to/nknapp


தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காத்து நம் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய செவிலியர்களைச் சுகாதாரத் துறையும், வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகமும் மிகுந்த மரியாதையுடன் கவுரவிக்க வேண்டும், அதை விடுத்து அவர்களுக்குப் போக்குவரத்து ஏற்பாடு கூட செய்யாமல் அலட்சியம் செய்த இந்த அரசையும், சுகாதாரத் துறையையும் வேலூர் மாவட்ட திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்" எனச் சாடியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்