Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

vck sruggle against Annamalai University


சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றாததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ்மொழி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.  மாவட்ட செயலாளர் மணவாளன் அனைவரையும் வரவேற்றார்.

 

கடலூர் மாநகர் மன்ற துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் அறவாழி, நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் செல்லப்பன், மண்டல துணை செயலாளர் ஐயாயிரம்,  மாவட்ட செயலாளர்கள் நீதி வள்ளல், அறிவுடை நம்பி, செந்தில், திராவிட மணி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எஸ்சி எஸ்டி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் 2 விழுக்காடுகள் மட்டுமே உள்ளனர்.  சமூகநீதி என்ற கொள்கையின் செயல் வடிவமே இட ஒதுக்கீடு, இந்த இட ஒதுக்கீட்டை புதை குழியில் போடுவதை எதுவரை சகிக்க முடியும்.  சில தளங்களில் நிர்வாக தலைமையின் சிறிய ஆளுமை வெளிப்படுகிறது.  சில தளங்களில் கண்டும் காணாத பொறுப்பற்ற போக்கு தொடர்கிறது.

 

அரசு பல்கலைக்கழகத்தை முழு கட்டுப்பாட்டிற்கு எடுத்த போது நிதிச் சிக்கலை மட்டுமே கணக்கிட்டுள்ளனர். ஆனால் அதில் இட ஒதுக்கீட்டை கருதவில்லை. இதனால் கடைசியாக பணியில் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் தற்போது 2 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரம் கேட்டும் இதுவரை தரவில்லை. அதேபோல் 10 ஆண்டுகளாக நிலவையில் உள்ள 205 தொகுப்பு ஊதிய பணியாளர்களையும் என் எம் ஆர் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வு ஊதிய ஒப்படைப்பு தொகை, பணிக்கொடை,7-வது ஊதிய குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க ஆவண செய்ய வேண்டும்.

 

எஸ்சி, எஸ்டி, எம்பிசி காலி பணியிடங்களை உடனே நிரப்பிட ஆவண செய்ய வேண்டும்.  நிர்வாகம் இட ஒதுக்கீட்டை செம்மைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சிறப்பு ஆட்சி மன்ற குழுவை கூட்டி மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து பல்கலைக்கழகத்தை மீண்டும் சீர்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்