Skip to main content

மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு; தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Union Minister's Controversial Speech TN leaders strongly condemned

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இருந்தன. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Union Minister's Controversial Speech TN leaders strongly condemned

இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “பாஜகவின் பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் ஏற்க மாட்டார்கள். பொது அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் ஷோபா கரந்த்லாஜே மீது சட்டப்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ராமேஷ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தை தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், பா.ஜ.க. மத்திய இணையமைச்சர் ஷோபா தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது. பா.ஜ.க. தனது இழிவான பிரிவினைவாத அரசியலால் மீண்டும் தாழ்ந்துள்ளது. இவர்களின் இந்த கேவலமான கூற்றுகளை தமிழர்களும், கன்னடர்களும் நிராகரிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Union Minister's Controversial Speech TN leaders strongly condemned

மேலும் அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்தியத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்