Skip to main content

மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய் சரிவு!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

புதுவரத்து மஞ்சளுக்கு எதிர்பார்ப்பு நிலவுவதால் பழைய மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய் வரை குறைந்துள்ளது. 


தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்து, சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழக மஞ்சளுக்கு வட இந்திய மாநிலங்களிலும் பெரும் வரவேற்பு இருப்பதால், இங்கிருந்து அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால், ஏல மையங்களுக்கு மஞ்சள் வரத்து 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.  இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது:

turmeric price suddenly decrease



சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். தற்போது புது மஞ்சளை எதிர்பார்த்து காத்திருப்பதால், பழைய மஞ்சள் விற்பனை குறைந்துள்ளது. நேற்று (நவ. 27) நடந்த மஞ்சள் ஏலத்தில் வழக்கமாக வரவேண்டிய வரத்தைக் காட்டிலும் 50 சதவீதம் குறைந்துள்ளது. 


கடந்த சில வாரங்களாக மஞ்சள் குவிண்டால் 7500 ரூபாய் முதல் 8500 ரூபாய் வரை விலை போனது. நடப்பு வாரத்தில் குவிண்டால் 1000 ரூபாய் வரை குறைந்தது. தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் 6500 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. 


சேலம் லீ பஜார் ஏல மையத்திற்கு வழக்கமாக 60 முதல் 70 டன் மஞ்சள் விற்பனைக்கு வரும். இதன்மூலம் 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை ஏலம் நடக்கும். நேற்று நடந்த ஏலத்திற்கு 30 டன் மஞ்சள் மட்டும் விற்பனைக்கு வந்தது. இவை 25 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

 

சார்ந்த செய்திகள்