Skip to main content

ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர்; லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

trichy labour welfare department sub inspector bribe incident 

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நாதன் மகன் மனோகரன் (வயது 37). இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவர் ஆய்வு மேற்கொண்ட பின் அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கவில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.

 

அதன் பேரில் ஆலோசகர் மனோகரன் அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டுள்ளது என்று கூறி ஆவணங்களின் நகல்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். அதற்கு தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக், “திருச்சியில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் எங்களுக்கு முறையாகக் கவனித்து விடுகிறார்கள். ஆனால், உங்கள் நிறுவனத்தில் இருந்து மட்டும் எங்களை கவனிக்காமல் இருக்கிறீர்கள். நாங்கள் நினைத்தால் உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் தெரியுமா?” என்று கூறிவிட்டு, “15000 ரூபாய் லஞ்சமாகக் கொடுங்கள். உங்களுக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் மேற்படி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுவிட்டு, தன்னிடம் லஞ்சம் கேட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில் நேற்று (03.05.2023) மாலை சுமார் 4 மணியளவில் மனோகரனிடம் இருந்து தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்