Skip to main content

மான் வேட்டை நடத்தியவர் கைது

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
police

 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் பைபாஸ் சாலை அருகே உள்ள மகாத்மா காந்தி நகரில் சந்தேகத்துக்கு இடமாக இரண்டு பேர் மோட்டார் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்றுள்ளனர். அவர்களை பிடிப்பதற்காக அருகே நெருங்கும்போது அந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டுவந்த மூட்டையையும் மோட்டார் பைக்கையும் அப்படியே போட்டுவிட்டு அந்த இரு மர்ம மனிதர்கள் இருளில் தப்பி ஓடிவிட்டனர்.

 

அவர்கள் போட்டுவிட்டு ஓடிய அந்த மூட்டையை போலீசார் பிரித்து சோதனை செய்தபோது அதனுள்ளே மான் தலை, மான் கொம்பு, மான்கறி, நாட்டு துப்பாக்கி ஆகியவை இருந்தன. போலீசார் உடனடியாக திண்டிவனம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்து அவர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மான் வேட்டை நடத்திய அந்த இரு மர்ம ஆசாமிகளையும் தீவிரமாக தேடி வந்தனர். 

 

வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர். அதில் மரக்காணம் மேட்டு தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் சூர்யா (வயது 22) என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து திண்டிவனம் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மான் வேட்டையாடி உடலை வெட்டி எடுத்து மூட்டையாகக் கட்டி எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சூர்யாவை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது நண்பரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்