Skip to main content

தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பதற்கு இடமில்லை: ரஜினிக்கு எடப்பாடி பதிலடி!

Published on 08/03/2018 | Edited on 08/03/2018


தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருப்பதாகவும் அதனை நிரப்பவே தான் அரசியலுக்கு வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பதற்கு இடமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

திருச்சியில் கர்ப்பிணி உஷா இறந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியார் குறித்து டிவிட்டரில் பதிவு செய்யப்பட்ட கருத்து தனக்கு தெரியாமல் உதவியாளர் பதிவு செய்து விட்டதாக கூறி எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அவருக்கு தெரியாமல் நடந்திருந்தாலும் அது கண்டனத்துக்குரியதுதான். தந்தை பெரியார் ஒரு பொக்கி‌ஷம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர்.

தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சிலைகளின் மீது பெயிண்ட் ஊற்றினாலோ, சேதப்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலையை யாராவது சேதப்படுத்தப்போகிறார்கள் என்கிற தகவல் வந்தால் கூட அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ளும்.

எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்போம் என்று நடிகர் ரஜினி கூறியது அவரது கருத்து. இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி கூட எம்.ஜி.ஆர். ஆட்சிதான். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க பாடுபட்டார். மறைந்த இரு தலைவர்களும் இறுதி வரை மக்களுக்காக பாடுபட்டனர். எனவே தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பதற்கு இடமில்லை என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம்” - நடிகர் ரஜினிகாந்த்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110 ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Lets call it an kalaignar Taj Mahal says actor Rajinikanth

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞரின் நினைவிடம் மிகவும் அருமை. ரொம்ப அற்புதம். இதனை கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.