Skip to main content

ராஜபார்ட் அதிகாரி மீது பாய்ந்தது நடவடிக்கை! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Tenkasi School Education Officer Sudalai transferred to kudalore

 

ராஜபார்ட் கெட்டப்பில் பள்ளியை ஆய்வுசெய்த பள்ளிக் கல்வி அதிகாரி, மேலதிகாரிகளின் விசாரணை, நடவடிக்கை என்று வேதனையோடு சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

 

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வுபெற்று வந்திருப்பவர் சுடலை. ஆரம்பத்தில் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்த சுடலை, கடந்த 2019ஆம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்று சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி கல்வி மாவட்டங்களில் பணிபுரிந்திருக்கிறார். அதன் பின், பணி மாறுதலாகி 2 மாதங்களுக்கு முன்புதான் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றார். கல்வி மாவட்டத்தின் சுமார் 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதிகாரி சுடலையின் ஆய்வுக்கு உட்பட்டவை என்கிறார்கள்.

 

இந்நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி சுடலை பணி மாறுதலாகி வந்த பின்பு முதன்முதலாக கடந்த 14ஆம் தேதியன்று மாவட்டத்தின் கடையம் நகரில் இயங்கிவருகிற அரசு உதவி பெறும் தனியார் மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு ஆய்வுக்காகச் சென்றுள்ளார். மாவட்டக் கல்வி அதிகாரி முதன்முதலாகத் தங்கள் பள்ளிக்கு ஆய்வின் பொருட்டு வருவதால், அவரைச் சிறப்பாக வரவேற்க எண்ணிய நிர்வாகத்தின் பொறுப்பாளரான மணி, அதற்கான ஏற்பாடுகனைச் செய்தார். பள்ளி ஆசிரியர்கள் சகிதம் அதிகாரி சுடலைக்கு மாலையும் சால்வையும் அணிவித்த மணி, மன்னர் ரேஞ்சுக்குப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்க் கிரீடத்தையும் அவரது தலையில் அணிவித்து ஏறத்தாழ ராஜபார்ட் கெட்டப் கொடுத்து வரவேற்பு அளித்துள்ளனர். இயல்பாகவே அதிகாரி சுடலை, தனது இரண்டு கை விரல்களிலும் கவர்ச்சியான மோதிரங்களைப் போட்டிருப்பது அவரது பழக்கங்களில் ஒன்று.

 

பள்ளி நிர்வாகம் வரவேற்பு அளித்ததை ஏற்றுக்கொண்டவர், அணிந்த மறுகணமே யதார்த்தமாக மாலை இத்யாதிகளை அகற்றியிருக்க வேண்டும். ஆனால், ராஜ அம்ச வரவேற்போடு போர்த்திய சால்வையுடனும் மாவட்டக் கல்வி அதிகாரி ஆய்வு செய்ததுடன், ஆய்வுப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த கெட்டப் நிகழ்வுகளைப் புகைப்படமாகவும் அதிகாரி எடுத்து வைத்துக்கொண்டாராம். இதுவே அவருக்கு வினையாக அமைந்திருக்கிறதாம்.

 

Tenkasi School Education Officer Sudalai transferred to kudalore
சுடலை 

 

மாவட்டத்திற்குப் பணி மாறி வந்த விளம்பரப் பிரியரான அதிகாரி சுடலை, எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தனது பணியின் விசேஷமான நிகழ்வுகளையும், படங்களையும் தன்னுடைய துறையின் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துகொள்வது அவரது இயல்பாம். அதற்கேற்ப அரிதிலும் அரிதான, தான் எடுத்த ராஜபார்ட் கெட்டப் ஆய்வின் புகைப்படத்தைத் தன்னுடைய துறையின் குரூப்பில் இயல்பாக வெளியிட்டிருக்கிறாராம். அவரது நேரம், துறை வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட அதிகாரியின் இந்த அரிதார அவதாரப் படத்தைக் கல்வித்துறையின் யாரோ ஒருவர், வேறு குரூப்பில் பகிர்ந்துகொள்ள, அதிகாரியின் ராஜதர்பார் ஆய்வு வைரலாகிவிட்டது. நெட்டிசன்கன் பலமாதிரியான கமெண்ட்களைப் பதிவுசெய்து தள்ளிவிட்டனர்.

 

அதிகாரியின் இந்த ராஜாதி ராஜ ஆய்வு அரசுத்துறையின் உயரதிகாரிவரை போக, பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர், நடந்தவற்றை விசாரிக்க தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியான கபீர், நேற்றைய தினம் (20.12.2021) நடந்தவைகளை விரிவாக விசாரணை செய்து அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறாராம். 

 

இதுகுறித்து நாம் மாவட்டக் கல்வி அதிகாரியான சுடலையை தொடர்புகொண்டபோது, “பள்ளிக்கு நான் ஆய்வின் பொருட்டு சென்றபோது, அவர்கள் மகிழ்ச்சியில் புதிய அதிகாரி ஆய்விற்கு வருகிறார், வரவேற்க வேண்டும் என்றெண்ணி இந்த வரவேற்பு அளித்தார்கள். நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனா பள்ளி நிர்வாகத்தினர் கட்டயாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன். ஆசிரியர் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். அது இவ்வளவு தூரம் போகும்னு நெனக்கல்ல. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் விசாரணையில் நடந்தவைகளைச் சொல்லியுள்ளேன்” என்கிறார்.

 

இந்நிலையில், இன்று விசாரணைக்குப் பின்னர் அதிகாரி சுடலை கூடலூருக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்