Skip to main content

கோயில் திருட்டு வழக்கு; பலியான சிறுமி... காப்பகத்தில் பரிதவிக்கும் மற்ற குழந்தைகள்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Temple theft case police arrested two

 

புதுக்கோட்டை மாவட்டம், அன்டக்குளம் அருகே கிள்ளனூர் சுற்றியுள்ள கிராமங்களின் கோயில்களில் கடந்த 14ம் தேதி ஒரு குடும்பத்தினர் கோயில் பாத்திரங்களைத் திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பிச் செல்ல முயற்சித்தனர். ஆனால், சுற்றுவட்டார கிராம இளைஞர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிள்களில் அவர்கள் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்றனர். இளைஞர்கள் விரட்டி வருவதைப் பார்த்த ஆட்டோவில் இருந்தவர்கள் திருடிய கோயில் பாத்திரங்களை சாலைகளில் வீசிச் சென்றனர். விடாமல் விரட்டிச் சென்ற இளைஞர்கள் மச்சுவாடியில் ஆட்டோவைப் பிடித்துள்ளனர்.

 

ஆட்டோவை நிறுத்தியதுடன் ஆட்டோ மற்றும் அந்த ஆட்டோவில் இருந்தவர்களை கம்புகள் மற்றும் கையால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் ஆட்டோவில் கோயில் பாத்திரங்களை திருடிச் சென்ற கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த சக்திநாராயணசாமி மற்றும் அவரது மனைவி லில்லி புஷ்பா, அவர்களின் 2 மகன்கள், 2 மகள்கள் என 6 பேரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கற்பகாம்பிகா என்ற சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் 16ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி பலியான சம்பவத்தில் சிறுமியின் தாய் லில்லி புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் முதலில் அடையாளம் தெரியாத 30 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பிறகு 6 பேரை கைது செய்தனர். இந்த கைதினைக் கண்டித்து அன்டக்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

 

அடித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோர்கள் முன்னிலையில் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்ட நிலையில், கோயில் பொருட்களை திருடியதாக நாராயணசாமி மற்றும் அவரது மனைவி, ஒரு மகனை கைது செய்தனர் போலீசார். ஆதரவில்லாமல் தவித்து நின்ற மற்ற ஒரு மகன் மற்றும் ஒரு மகளை குழந்தைகள் பாதுகாப்பு குழுவான சைல்டு லைன் குழுவினர் மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணை செய்து அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இரவு நேரத்தில் குழந்தைகளை கடலூர் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் தற்காலிகமாக குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

 

இந்த நிலையில், இன்று காலை சகோதரியை இழந்து, பெற்றோர் சிறையில் இருக்கும் நிலையில் அந்த 2 குழந்தைகளும் கடலூர் குழந்தைகள் நல குழுமத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இந்த நிலையில், குழந்தை கற்பகாம்பிகாவை கொடூரமாகத் தாக்கிக் கொன்றவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்