தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது,
“விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் காரணமாகத்தான் மாவட்டத்தில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வந்த ஒருவர் மூலம் திருத்தங்கல்லில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து சமூக விலகலைக் கடைப்பிடித்தால் கரோனா வைரஸைத் தடுக்க முடியும்.
கரோனா வைரஸினால் இறப்பு என்பதே இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது. மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தங்களால் இயன்ற அளவிற்குப் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் கரோனா தடுப்புப் பணியில் நகராட்சி ஆணையாளர்கள், யூனியன் ஆணையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து அரசுப் பணியாளர்களும் கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தற்காலிகமாகப் பணியாற்றும் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்தப் பணியாளர்களைப் படிப்படியாக நிரந்தரப் பணியாளராக ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்றைக்கு ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாகப் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், பணியாளர்கள் என 1,500 நபர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கியுள்ளோம்.
இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளனர். தமிழக அரசின் துரித நடவடிக்கை காரணமாகத் தமிழகத்தில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.