Skip to main content

'தமிழக மக்கள் மோடியை வஞ்சிக்க தயார்' - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
MODI

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருப்பூர், தூத்துக்குடி வந்திருந்த பிரதமர் மோடி நேற்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். அதன்படி சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.  இதனையடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்  ‘நான் தமிழகம் வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மழை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க. அரசு சரிவர செயல்படுத்தவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக தி.மு.க. தெரிவித்துக் கொண்டிருந்தது. தி.மு.க. குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம். இது மோடியின் உத்தரவாதம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. குடும்பக் கட்சிகள் ஆண்ட காலத்தில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை'' என பேசியிருந்தார்.

'Tamil people are ready to deceive Modi'- Minister Shekharbabu interview

இந்தநிலையில் சென்னையில் நடந்த 'மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் மோடியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நரேந்திர மோடி அவருடைய கட்சி நோட்டாவிற்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார். இந்த ஆண்டு வரையில் இது ஆறாவது முறையாக தமிழகத்திற்கு ஒரு பிரதமர் வந்து கொண்டிருக்கின்றார். யாருக்கு வயிற்றில் புளியை கரைத்து கட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து வருகிறாரோ? அவருக்கு தான் திமுகவும்,  திராவிட மாடல் ஆட்சியும் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களுடைய கருத்து. நம்மிடம் இருந்து பெறப்படுகின்ற வரியில் இருந்து அவர்கள் திரும்பி கொடுக்கும் சதவிகிதத்தை பார்த்தால் நாம் அளிக்கிறது 100 என்றால், 25 சதவீதம் அளவிற்குதான் அவர்கள் திரும்பி நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கிறார்கள்.

ஒரே ஒரு கேள்வி அவர்களை பார்த்து கேட்பது என்னவென்றால் இத்தனை முறை வருகின்ற பிரதமர் வெள்ளத்தால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போதும் கூட ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத பிரதமர் தமிழகத்திற்கு இத்தனை முறை வருவது அவருடைய அரசியல் லாப நோக்கத்திற்காகத்தானே?  அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய துயர் துடைப்பதற்கு இதுவரை ஒரு சல்லிக்காசு கூட நிவாரண நிதியாக தமிழகத்திற்கு வழங்காமல் வஞ்சிக்கின்ற பிரதமரை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வஞ்சிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்