Skip to main content

போதைப் பொருள் விற்பனை விவகாரம்; குஜராத்தில் அதிரடி காட்டிய தமிழக போலீசார்

Published on 07/03/2024 | Edited on 08/03/2024
Tamil Nadu police in action in Gujarat

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை ஊசிகளாக மாற்றி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகப் போலீசார் 15 பேரை கைது செய்தனர். இந்த 15 பேரிடம் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தைச் சேர்ந்த சிக்திக் கவுசிக் என்பது தெரியவந்தது.

அதே சமயம் போதைப் பொருளை விற்பனை செய்த 15 பேர் கைது செய்யப்பட்டதை அறிந்த முக்கிய குற்றவாளியான சிக்திக் கவுசிக் குஜராத்திற்கு தப்பிச் சென்றுவிட்டார். இதனையறிந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குஜராத்திற்கு விரைந்தனர். அங்கு சிக்திக் கவுசிக்கை தமிழக போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிக்திக் கவுசிக் ஈரோடு பகுதியில் தங்கி இருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போதை மாத்திரையை உபயோகித்த ஈரோட்டைச் சேர்ந்த மேலும் 3 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் உறுதி செய்துள்ளார். மேலும், “போதை மாத்திரை விற்பனை செய்வோர் குறித்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்