Skip to main content

மழையால் உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த வல்லங்களுக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Tamil Nadu CM announcement Relief for rain-affected livestock and farmers

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகையாக ஏற்கனவே வழங்கி வந்த ரூ. 5 ஆயிரத்திலிருந்து தற்போது ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்; நெற்பயிர் பாதிப்புகளுக்கான இழப்பீடு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கான நிவாரணம் ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக தலா ரூ.4,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் முழுமையாகச் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.50,000 எனவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.15,000 எனவும் வழங்கப்படும். அதேபோல், முழுவதும் சேதமடைந்த வல்லங்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், முழுவதும் சேதமடைந்த இயந்திர படகுகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

சார்ந்த செய்திகள்