Skip to main content

சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு முதல்வர்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Tamil Nadu Chief Minister announces relief for idol making workers

 

தமிழ்நாடு அரசின் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 21.06.2021 அன்று தொடங்கியது. அவையைத் தொடக்கி வைத்துப் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும், திட்டங்களையும் விவரித்தார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தினமும் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், செப் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

 

இந்நிலையில், பேரவையில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் வழிபாடு, ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதற்குப் பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க தேவையான கட்டுப்பாடுகளை செப் 30ஆம் தேதிவரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டு காட்டியுள்ளது. கேரளாவில் ஓணம், பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் கூட அனுமதி அளித்ததால்தான், அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இன்றுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முழுமையாக தடுக்கப்படவில்லை.

 

அந்த எண்ணிக்கை ஒருநாளுக்கு 50 ஏறுவதும், குறைவதுமாக இருந்துவருகிறது. எனவேதான் மக்களின் பாதுகாப்பு, நலனைக் கருத்தில் கொண்டு செப். 15ஆம் தேதிவரை அனைத்து சமய விழாக்களையும் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்திக்கும் பொருந்தும்.

 

நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுவரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, மழைக் காலத்தில் தொழில் செய்ய இயலாத நிலையில், அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. இவர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கரோனா தொற்றால் பொது இடங்களில் விழாக்கள் கொண்டாட விதிக்கப்பட்ட தடையால், தங்கள் தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகையுடன் மேலும் 5 ஆயிரம் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்” என முதல்வர் அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்