Skip to main content

நான் சுஜித் பேசுகிறேன்…. கல்வெட்டை திறந்து வைத்த கலெக்டர்!!

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், திண்டிவனம் நெடுஞ்சாலையில் தென் அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு நவம்பர் 1ந்தேதி மாலை சென்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அங்கிருந்த பள்ளி மாணவர்கள் மத்தியில், திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த சுஜித்தின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார், மாணவ – மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர்.
 

sujith inscription


பின்னர், நான் சுஜித் பேசுகிறேன் என்கிற தலைப்பில் ஒரு கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் சுஜித் போர்வெல்லில் தான் விழுந்து துடித்து இறந்தது பற்றி குறிப்பிடுவது போல் இருந்தது அனைவர் மனதையும் உருக்கியது.

பின்னர் பள்ளிக்கு அருகில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து ஆழ்துளை கிணறு மூடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதோடு, அந்த ஆழ்துளை கிணறு மழைநீர் சேகரிப்பாக மாற்றப்பட்டு, பாதுகாப்பாக மூடும் பணிகளை செய்யச்சொன்னார்.
 

sujith inscription


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, "திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்ததை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 5804 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டு, அதில் மழைநீர் சேகரிப்பாக மாற்றக் கூடியதை மாற்றியும், பயன்படுத்த முடியாத ஆழ்துளை கிணறுகளை முழுமையாக மூடும் பணிகளும் முடிவடைந்துள்ளது. இப்பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உள்ளாட்சி நிர்வாகம் (நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள்), வருவாய்த் துறை, காவல் துறை மூலமாகவும், மேலும் பொதுமக்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டது. 

மேற்கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 1800-425-3678 மற்றும் 04175-233141 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், எனது கைபேசி 94441 37000 எண்ணிலும் தொடர்பு கொண்டும், வாட்ஸ்அப் தகவலாகவும் தெரிவிக்கலாம்" என்றார்.

சார்ந்த செய்திகள்